Archive for the ‘மௌனம் – விடியல்’ Category

விடியல்

2010, மே மாதம் 22ம் தேதி எழுதியது

இருளில் ஒரு மழைத்துளி பட்டால்
அது நன்றாயினும் பிழையல்லவா
கைகள் எரிக்கும் தீப்பொறியை
காத்து நின்றேன் விடியலுக்காக

Advertisements

பிறப்பு

2010, மே மாதம் 20ம் தேதி எழுதியது

யாரும் அறிந்தார் அந்நாளே
நான் மண்ணில் பிறந்த பின்னே
அறியவில்லை யாரும் அந்நாளே
நான் என்னில் பிறந்த பின்னே

உயிரில் வெளிச்சம் – XI

2010, மே மாதம் 14ம் தேதி எழுதியது

கடலென்று தெரிந்த பின்னும்
கல்லை கண்டு நடுங்குவதுண்டோ
புயலாய் பிறந்த பின்னும்
முள்ளை கண்டு பதறுவதுண்டோ

போராட்டம்

2010, மே மாதம் 1ம் தேதி எழுதியது
வானில் செல்ல
பறவையாய் பிறந்தேன்
சிறகுகள் பிரிந்தது
மேகத்தில் பிறந்தேன்
மேகம் மறைந்தது
காற்றாய் பிறந்தேன்
காற்றில் நானே
நானாய் பிறந்தேன்

உயிரில் வெளிச்சம் – IV

2009, திசெம்பர் மாதம் 24ம் தேதி எழுதியது

தொடங்கும் முன்பே
முடிந்து விடும்
பல பயணங்கள் உண்டு
அந்த முடிவில் இருந்து
தொடங்கும்
சில பயணங்கள் உண்டு

விழிகளில் பல
தூரங்கள் விரிந்தாலும்
சில உறக்கங்கள் உண்டு
நினைவுகள் எட்டி பார்க்கும்
அந்த உறக்கத்தில்
சில துளிகளும் உண்டு

யாரோ விரித்த பாதையில்
தனக்காக நடப்பவர் எல்லாம்
புத்திசாலி ஆவதா
நான் விரித்த பாதையில்
பிறருக்காக நடப்பதால்
நான் மட்டும் பாவி ஆவதா

ஆயிரம் முறை விழுந்தாலும்
வலிகளை வாங்கத்தான்
கற்றதிந்த நெஞ்சம்
உயிர் வரை வலித்தாலும்
திருப்பி கொடுக்கத்தான்
கற்றதில்லை என்றும்

சிறகுகள் விரித்ததால்
தவறானது
ஒரு இறகில் காயம்
இறகை துறந்து விட்டு
மீண்டும் சிறகை
விரிக்கிறேன் நானும்

நினைவுகள் என்னை
சூழ்ந்தது போதும்
நான் கண்கள் மூடுகிறேன்
அதில் கனவுகள் என்று
இனி ஏதும் இல்லை
என் உயிரை திறக்கிறேன்

சிரித்து போகவும்
ரசித்து போகவும்
வாழ்வில் வரம் என்னவோ
அதை எண்ணிப்பார்க்கத்தான்
தோன்றவில்லை
இந்த வாழ்வே வரமல்லவோ

உயிரில் வெளிச்சம்
பரவிய பின்னே
இருளென்று ஒன்றும் இல்லை
மூச்சுக்காற்று
தணியும் வரை
முற்றுபுள்ளி ஏதும் இல்லை

இறைவனின் பாதை

2009, திசெம்பர் மாதம் 7ம் தேதி எழுதியது

சித்திரம் வரைந்து
முடிக்கும் முன்னே
சுவர் இடிந்து விழுந்தது
சுவருக்கு பின்னே
இறைவன் வரைந்த பாதை
அழகாய் விரிந்தது எனக்காக

மழை

2009, திசெம்பர் மாதம் 1ம் தேதி எழுதியது

பொழிவதும் நானே
நினைவதும் நானே
என் நெஞ்சில் பிறந்தது
மழைக்காலம்

புயல்

2009, நவம்பர் மாதம் 20ம் தேதி எழுதியது

மழையில் வந்த புயலை
என்னுள் புதைத்தேன்
சாரல் முடிந்த தென்றலாய்
நான் மாறிப்போனேன்

விடியல்

2009, ஒக்ரோபர் மாதம் 3ம் தேதி எழுதியது

விடியல்
இரவில் இருப்பதால் வந்த
பரிசென்று நினைப்பவன்
அதிர்ஷ்ட்டசாலி
இரவை கடந்ததால் வந்த
பரிசென்று நினைப்பவன்
போராளி