Archive for the ‘மௌனம் – நினைவுகள்’ Category

அடுத்த விருந்தாளி

2009, திசெம்பர் மாதம் 6ம் தேதி எழுதியது

அந்த தெருவின் வீதியில் கொஞ்சம் சலசலப்பு. அவ்வழியாக நடந்து பழகியவர்கள் இப்பொழுது அதை கடந்தால் நிச்சயமாக ஏதோ ஒரு மாற்றத்தை உணர்வார்கள். 17ம் நம்பர் வீட்டில் பேச்சு சப்த்தம் சற்று அதிகமாகவே ஒலித்து கொண்டிருந்தது. என்றோ ஒரு நாள் தான் அந்த வீட்டில் இத்தனை குரல்களின் சங்கமம் நடைபெறும்…

“அவர் முகம் இன்னும் அப்படியே தான் இருக்கு…”

“பாட்டிக்கு மட்டும் என்ன கொறைச்சல்? அவங்க அழகு குறைஞ்சா போயிருக்கு?”

“என்னடா கிண்டல் பண்றியா? உங்கப்பன் ஆறு வயசுல எடுத்த ஒரு போட்டோ இருக்கு அதை காட்டட்டுமா?”

“இது யாரு பாட்டி?”

“உன் சுந்தரம் மாமா இருக்காருல. அவருக்கு தங்கச்சி முறை வேணும்”

“ஐயோ… பழைய ஆல்பம் பார்த்துட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல. நாங்க கிளம்பனும் பாட்டி”

“என்னப்பா… இன்னும் கொஞ்சம் நேரம் இருந்துட்டு போகலாமே?”

“இல்ல பாட்டி… இன்னொரு நாள் கண்டிப்பா வரோம். இன்னும் ரெண்டு மூணு வீட்டுக்கு போகணும். அதான்…”

“சரிப்பா. ஒரு நிமிஷம்… இந்த பழம் பூ எல்லாம் எடுத்துட்டு போய் உங்க பொண்டாட்டி புள்ளைங்களுக்கு கொடுங்க. அடுத்த தடவ வரும் போது எல்லாரையும் கூட்டிட்டு வரணும்.”

“கண்டிப்பா கூட்டிட்டு வரோம் பாட்டி.”

“போயிட்டு வாங்க…”

வேதனை கலந்த புன்னகையுடன் அவர்களை வழி அனுப்பி வைத்த பின்பு, வாசலை அவர்கள் கால்கள் கடக்க, ஏதோ சொல்ல நினைத்து பின்பு வார்த்தைகளை முழுங்கி கொண்டார்.

உறவுகளின் உருவங்கள் மெல்லமாய் மறைய, எதையோ துளைத்த கண்களுடன் அந்த திசையை பார்த்து கொண்டே கதவை மூடினார். காற்று முணுமுணுத்து கொண்டிருந்த பேச்சு சப்தங்களும் ஓய்ந்து போனது. தன் தோழியான நிசப்த்தம் ஏனோ திடீர் எதிரியாக மாறி இருந்தாள்.

மெல்லமாக தான் காட்டி கொண்டிருந்த ஆல்பத்தை கையில் எடுத்து புரட்டினார். அந்த புகைப்படங்கள் அவரிடம் ஏதோ சொல்வது போல் இருந்தது. சற்று உற்று கவனித்தார் 80 வயதான சாந்தா பாட்டி. தன் தனிமை பாடிய இசைப்போல் ஒலித்த அந்த குரல்களை கேட்டு குழப்பம் எதுவும் வரவில்லை. அடுத்த விருந்தாளி வரும் வரை – இவையுடன் தொடரும், அவர் நினைவு பயணங்கள்.

Advertisements

2009, ஒக்ரோபர் மாதம் 28ம் தேதி எழுதியது

குரலுடன்
இசை சேர்ந்ததால்
பாடல் அழகானது
அந்த பாடலுடன்
நீ சேர்ந்ததால்
என் நினைவுகள் அழகானது

மௌனம் – II

2009, ஜூன் மாதம் 13ம் தேதி எழுதியது

இசை தந்த மௌனத்தில்
மனம் தெளிந்தேன்
இயற்க்கை தந்த மௌனத்தில்
நினைவு துறந்தேன்
காலம் தந்த மௌனத்தில்
கனவுகள் வளர்த்தேன்
மனம் தந்த மௌனத்தில்
எண்ணம் விதைத்தேன்
உயிர் தந்த மௌனத்தில்
என்னை உணர்ந்தேன்
நீ தந்த மௌனத்தில்
உயிர்த்துளி வடித்தேன்

வருடங்கள்

2009, மார்ச் மாதம் 1ம் தேதி எழுதியது

வகுப்பறையில்
நாள் முழுவதும்

வேலை கிடைத்த பின்னே
வாரம் ஒரு முறை

நேரம் குறைந்து
தொலைபேசி மட்டும்

கொஞ்சம் மறதி
மாதம் ஒரு நாள்

மேலும் மறதி
நண்பர்கள் திருமணம்

பேச வேண்டும்
பண்டிகை வாழ்த்து

ஞாபகம் வந்து
பிறந்தநாள் வாழ்த்து

ஓடிய வருடங்களில்
கண்கள் நீர் கண்ட போது

பறந்து சென்ற நாட்களில்
கரங்கள் தேடி நின்ற போது

வார்த்தைகள் குறைந்தாலும்
நினைவுகள் கறையாது

காலம் கறைந்தாலும்
நட்புகள் மறையாது

அம்மா

2009, ஜனவரி மாதம் 11ம் தேதி எழுதியது

என்னை
குழந்தையாக
நினைவில் கொண்டு
சிரித்ததில் கண்டேன்
குழந்தையாக
உன்னை

மறைவு

2009, ஜனவரி மாதம் 4ம் தேதி எழுதியது

இசைத்ததெல்லாம்
செவியை தொட்டு
மனதை தொடாமல்
மாயமானதேன்
செவித்ததெல்லாம்
மறைந்த பின்பும்
மறையாத நினைவுகளால்
காயமானதேன்

திருட்டு

2008, திசெம்பர் மாதம் 28ம் தேதி எழுதியது

கள்ளம் கபடம் அறியா உன்னிடம்
கள்வர்கள் ஆனோம்
நீயே அறியாமல்
பல நினைவுகளை திருடி சென்று

எங்கள் வாழ்வின் நவரசம்

2008, திசெம்பர் மாதம் 7ம் தேதி எழுதியது

என் 100 வது கவிதை – எங்கள் வீட்டு கவிதை(ரீமா)க்கு இது சமர்ப்பணம்

ஆச்சர்யம்

உன் விரல் அசைவு முதல்
விழி அசைவு வரை
தினமும் புதிதாய் தோன்றுகிறாய்

பயம்

காற்றுக்கு கூட
காவல் வைப்போம்
உன்னை தீயவை
அண்டாமல் இருக்க

கருணை

பலன் ஏதும் இல்லாமல்
உன் மேல் அன்பு செலுத்தியதால்
அனைத்து உயிர்களுக்கும்
கருணை காட்டி பழகினோம்

கோபம்

உன் உறக்கத்தை களைத்த
ஒலிகள் மீதும்
இசையின் மீதும் கூட
எங்கள் கோபம்

சாந்தம்

இமைகள் மூடிய உன் முகம்
சாந்தமாக்கும்
ஆயிரம் புயல்களை

சோகம்

உன்னை சூழ்ந்த
கண்களை கண்டு அழுகும்
தொலைக்காட்சி பெட்டி

அன்பு

நாங்கள் உனக்கு சொல்ல
ஆயிரம் வார்த்தைகள் புதிதாய்
நீ எங்களுக்கு சொல்ல
உன் சிரிப்பு மட்டும்

வீரம்

உன் முகத்தில் அச்சம் தவிர்க்க
வானை வீழ்போம்
கண்மணியே

ஆனந்தம்

நீ எங்கள் வாழ்வில்
வார்த்தைகளில்
செய்கைகளில்
இருக்கும் ஒவ்வொரு நொடியும்

உணர்வுகள்

2008, நவம்பர் மாதம் 22ம் தேதி எழுதியது

அன்று என்ன நேர்ந்தது…
இதழ்களில் விளையாடிய புன்னகை
இயற்க்கையா செயற்க்கையா…
எப்பொழுது அந்த இரு விரல்கள்
என் தலையை அலங்கரித்தது…
மூலையில் எட்டி பார்த்த
கரங்கள் யாருடையது…
பின் இருந்த கடிகாரம்
நின்றது போல் நினைவு…
தரையில் ஒரு தினசரி
அன்று என்ன தலைப்பு செய்தி…
யார் குடித்து வைத்த தேநீர்
உருண்டிருந்த கோப்பையில்…
துளைந்து போன விவரங்கள் ஆயிரம்
என்றும் துளையாத உணர்வுகள்
இந்த புகைபடத்தில் மட்டும்

வலி

2008, நவம்பர் மாதம் 16ம் தேதி எழுதியது

உன் நினைவுகள்
தந்த வலியைவிட
பெரிதானது
உன்னை நினைவிருக்கிறதா
என்று நீ கேட்ட போது
வந்த வலி