Archive for the ‘மௌனம் – சிந்தனை’ Category

நேரம்

2010, ஒக்ரோபர் மாதம் 2ம் தேதி எழுதியது

சூரியனின் ஏற்றம் இறக்கம்
இணைந்தால் பிறப்பது நேரம்
விதியின் ஏற்றம் இறக்கம்
இணைந்தால் பிறப்பது வாழ்க்கை

Advertisements

காலம்

2010, ஓகஸ்ட் மாதம் 28ம் தேதி எழுதியது

உயிரின் அதிர்வுகள் அதை
காலம் என்றும் பிரியாது
காலம் என்றொரு மாயம் அதை
உயிர் என்றும் அறியாது

வெற்றி

2010, ஜூலை மாதம் 24ம் தேதி எழுதியது

வெற்றிகளை பாடும் வரிகளில்
பாதைகள் தொலைந்து போகும்
பாதைகள் தொலைந்த பூமியில்
அதிர்ஷ்டங்கள் பாவமாகும்

தெரியாது

2010, ஜூன் மாதம் 20ம் தேதி எழுதியது

பயங்களில் எத்தனையோ விதங்கள் உண்டு. சிலருக்கு வறுமையை கண்டால் பயம், சிலருக்கு வன்முறையை கண்டு பயம், சிலருக்கு மேடை ஏறுவதில் பயம். உலகெங்கும் நூற்றுக்கணக்கான பயங்கள் (phobia) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் எல்லாவற்றிலும் ஒரு வினோதமான பயம் ஒன்று மனிதர்களை ஆள்வதுண்டு. அது ‘தெரியாது’ என்றொரு வார்த்தையின் மீதுள்ள பயம். இதில் வேடிக்கை என்னவென்றால், இப்படி ஒரு பயம் உள்ளே இருப்பது யாருக்கும் தெரிவதில்லை, தெரிந்தாலும் அதை கண்டு வருத்தப்படுவது இல்லை.

பிள்ளைகளின் ஆர்வத்தை யாராலும் கட்டுபடுத்த முடியாது. கற்றல் இல்லாமல் அவர்கள் அறிவும் மனமும் திடமான வளர்ச்சி அடைய வாய்ப்பே இல்லை. அந்த ஆர்வம் இயற்க்கை கொடுத்த ஒரு அழகான பரிசு. ஆனால் ஏனோ நாம் வளர வளர பல விஷயங்களை அறிந்து கொண்டதை போன்ற ஒரு மாயை தோன்றுவதுண்டு. அந்த மாயையில் சிக்குபவர்கள் கற்றலில் உள்ள ஆர்வத்தை தொலைத்து ஒரு கட்டத்தில் வாழ்க்கையின் பாடங்களை கூட புரிந்து கொள்ள முடியாமல் அறியாமையில் தவிக்கிறார்கள். இதில் சிக்காமல் தப்பிக்கொல்பவர்கள் மேலும் மேலும் பல புரிதல்களை கொண்டு வாழ்வை முழுமையாய் வாழ தெரிந்து கொள்கிறார்கள.

மனிதர்கள் ஏன் தனக்கு ஒரு விஷயம் தெரியாது என்று ஒப்புக்கொள்வதில் தயங்குகிறார்கள்? மற்றவர்கள் நம்மை முட்டாள் என்று நினைப்பார்கள் என்று ஒரு அச்சம் பிறப்பதால் தான். அப்படி என்றால் உலகில் உள்ள எல்லோரும் அனைத்தும் அறிந்த மாமேதைகள் தானே? இந்த கேள்வியை பார்த்தால் சிரிப்பு வருகிறதா? அப்பொழுது அந்த மெய்யில்லாத அச்சத்தை நினைத்தும் நாம் சிரிப்பது தானே சரி?

பலர் நினைப்பதை போல், கற்றலின் அவசியம் அறிவுடன் நின்று விடுவதில்லை. ஒரு புதிய விஷயத்தை கற்றும் கொள்ளும் பொழுது நம் மூளையின் ஒரு சில பகுதிகளில் ரசாயன மாற்றங்களும், மூளையின் அமைப்பும் மாற்றம் காண்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட விஷயம். மூளை பாதிப்புகள் கொண்டவர்களை கூட சரியான பயிற்சி முறைகளால் குணப்படுத்த மருத்துவத்தில் ஒரு தனி பிரிவே உண்டு.

பிள்ளைகள் எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பதற்கு அவர்களின் சுத்தமான மனம் மட்டும் காரணம் இல்லை, அவர்கள் எப்பொழுதும் எதையாவது கற்றுக்கொண்டு மனதை புதுப்பித்து கொண்டு இருப்பதும்தான். அது பெரியவர்களுக்கும் பொருந்தும். மனநலம் இருந்தால் உடல்நலமும் இலவச இணைப்பாக வந்து விடும். இப்படி கற்றல் ஒரு மனிதனை பலவிதங்களில் வளரச்செய்கிறது. இது இன்றோ நேற்றோ கண்டறிந்த உண்மையில்லை. நம் சரித்திர கதைகளில் கூட செல்வத்தில் செழித்த மனிதர்கள் யாவும் கற்ற மேதைகள் முன் தலை வணங்கி நின்றதாகவே படித்திருக்கிறோம். அது அந்த மனிதர்களை விட கற்றலுக்கு கொடுக்க பட்ட மரியாதை என்பதே உண்மை.

இவ்வளவு ஆற்றல் கொண்ட கற்றலை பார்த்து சிலர் பயப்படுவது வேடிக்கை என்பதை விட, பரிதாப பட வேண்டிய விஷயம் என்றே சொல்லலாம். கல்லாதது கடலளவு என்று படிக்கிறோமே தவிர, அதையும் நாம் கற்றுக்கொள்ள மறுக்கிறோம் என்பதே வருத்தம் தரும் உண்மை. யாரோ சிலர் நம்மை முட்டாள் என்று நினைப்பார்களே என்று பயந்து நம் வளர்ச்சியை நாமே முடக்கி போடுவது தான் உண்மையான முட்டாள்தனம்.

சரி, அச்சத்தை விட்டு விட்டோம். அப்பொழுதும் ஏதோ ஒரு சந்தேகம் எழும், நாம் எப்படி கற்றுகொள்வோம் என்று. கற்றல் என்றால், பலருக்கு ஆயிரக்கணக்கில் பக்கங்கள் கொண்ட புத்தகங்களை படிப்பது, பரீட்சை, என்று பள்ளி கல்லூரிகளில் இருந்த பயம் எல்லாம் எட்டி பார்க்கும். அது தேவை இல்லாத பயம் என்று புரிந்தாலும், “இதெல்லாம் நமக்கு வராது” என்று ஒதுங்கி கொள்பவர்கள் உண்டு. கண்டிப்பாக மனிதனால் புரிந்துகொள்ள முடியாத விஷயம் என்று இருப்பது கடவுள் ஒன்று தான். மற்றது யாவையும் சரியான வழியில் படித்து புரிந்து கொண்டால் எல்லாவற்றையும் கற்றுகொள்ளலாம்.

கண்டிப்பாக எல்லோருக்கும் சிறுவயதில் இருந்தே ஏதோ ஒரு விஷயத்தை பற்றி அனைத்தும் அறிந்து கொள்ள வேண்டும் என்று பல கனவுகள் இருந்திருக்கும். அது நாம் படித்த பள்ளி சூழலில் அதை அறிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம். இப்பொழுது அறிந்து கொள்ளலாமே.

இன்று ஒரு விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் ஒரு பெரிய மேதையிடம் தான் சென்று அதை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. இணையத்தில் தகவல்களுக்கு குறையில்லை என்பது யாவரும் அறிந்த விஷயம். இணையத்தில் அதிக நேரம் செலவழிக்க விருப்பமில்லை என்றால், எத்தனையோ நூலகங்களில் எடுத்து புரட்ட ஆளில்லாமல் ஆயிரமாயிரம் புத்தகங்கள் கண்ணீர் விட்டுகொண்டிருக்கின்றன. வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு. அதுபோலவே ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள ஆர்வம் இருந்தால் அதை பூர்த்தி செய்ய வழிகளுக்கு குறையில்லை, அதை யாரும் தடுக்கவுமில்லை.

பிறப்பு, இசை, கவிதை, மழை… இப்படி புதிதாக தோன்றும் பல விஷயங்கை நாம் அழகாகவே நினைக்கிறோம். தினமும் நம் அறிவை, மனதை, வாழ்க்கை தரத்தை புதுப்பித்து கொள்வதற்க்கு ஏன் முயற்ச்சிக்க கூடாது? புதியதாய் ஏதாவது தோன்றுமா என்று காத்து கொண்டிருக்காமல் நீங்களே அதை தேடி சென்றால் என்ன? பல விஷயங்கள் நமக்கு புரிய புரிய வாழ்க்கை மற்றும் உலகத்தின் மீதுள்ள பார்வை, நம் தன்னம்பிக்கை, சுயசிந்தனைகள், இப்படி பல விஷயங்கள் அழகாக மாறத்தொடங்குவதை நாமே உணர்வோம். அப்படி உணர்ந்து விட்டால் வாழ்க்கையில் சலிப்பிற்கு இடமே இல்லாமல் போய் விடும்.

பொய்

2010, மே மாதம் 1ம் தேதி எழுதியது
ஒருவன் பொய் என்றால்
கேட்பவன் மூடன்
நூற்றவர் பொய் என்றால்
சொல்பவன் மூடன்

இணக்கம்

2010, ஏப்ரல் மாதம் 17ம் தேதி எழுதியது
பாதைகள் உனக்கு
சரியென்றால்
முட்கள் மட்டும்
பிழையாகுமா
வெற்றிகள் எல்லாம்
உனதென்றால்
வீழ்ச்சிகள் மட்டும்
விதியாகுமா

நான் யார்?

2010, ஏப்ரல் மாதம் 11ம் தேதி எழுதியது
உங்களுக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் உங்களை பார்த்து “நீங்கள் யார்?” என்று கேட்டால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

உங்கள் பெயர்? வேலை? வசிப்பிடம்? படிப்பு? இப்படிப்பட்ட விவரங்களை நீங்கள் அறிவித்து கொள்ளலாம். நம்மை பற்றி அடுத்தவரிடம் சொல்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் தோன்றுகிறதல்லவா? 

 
சரி, இப்பொழுது நீங்கள் உங்களிடம் “நான் யார்?” என்று கேள்வி கேட்டால், என்ன சொல்வீர்கள்? இதென்ன… இதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது? என்னை பற்றி எனக்கே நன்றாக தெரியுமே என்று நீங்கள் நினைத்தால், பலரும் சிக்கிக்கொள்ளும் ஆணவ பிடியில் நீங்களும் சிக்கிகொண்டீர்கள். இப்படி சொல்பவர்கள் தங்களை தானே கேள்வி கேட்க மறுப்பவர்கள். தன்னை மேம்படுத்தி கொள்ள ஆசைப்படும் எந்த ஒரு மனிதரும் இந்த கேள்வியை புறக்கணிக்க மாட்டார்.
 
தன்னை கேள்வி கேட்க பலரும் அஞ்சுவதற்கு காரணம் – வெளியுலகத்திற்கு ஒரு சில விஷயங்களை மட்டும் எடுத்துக்காட்டினால் போதுமானது. ஆனால் நம்மை நாமே பரிசீலனை செய்கிற பொழுது நாம் மறைத்து வைக்கும் பல விஷயங்களையும் எதிர்கொள்ள வேண்டுமல்லவா? அப்படியே எதிர்கொண்டாலும் கையை சுட்டுக்கொன்டதை போல் அதை உடனே விட்டு விடுகிறோம். அதை ஒரு இயல்பாகவோ நிகழ்வாகவோ ஏற்று அதை தாண்டி செல்லும் மனதைரியம் எத்தனை பேருக்கு இருக்கிறது?
 
இப்பொழுது மீண்டும் நம் கேள்விக்கு வருவோம் – “நான் யார்?”. ஒரு முறை இதை கேட்டு பாருங்கள். உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறது? உங்கள் பெயர், வேலை போன்ற அடையாளங்கள் மட்டும் உங்களுக்கு தோன்றினால் இதை யோசித்து பாருங்கள்… உங்களை பற்றி நீங்கள் அறிந்து வைத்தது இவ்வளவுதானா? இந்த விவரங்கள் எல்லாம் மற்றவருக்கு தேவை படலாம். உங்களுக்கு எதற்கு? பின்பு உங்களுக்கும் மற்றவருக்கும் என்ன வித்தியாசம்?
 
இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்தித்து பாருங்கள். நீங்கள் யார்? உங்கள் தனித்தன்மையின் அடையாளங்கள் என்ன? இங்கே உங்களுக்கு வெற்றுமை இருந்தால் நீங்கள் உங்களை பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. ஆனால் அப்படி இருப்பவர்கள் சிலர் தான். பலரும் அவர்களின் அனைத்து இயல்புகளையும் குணங்களையும் ஏற்க்க மறுத்தாலும் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர். சிலர் அதையும் தாண்டி அந்த இயல்புகள் தங்கள் தினசரி உலகின் மீதும் அதில் தோன்றும் மனிதர்களின் மீதும் உருவாக்கும் விளைவுகளையும் அறிந்திருப்பார்கள். ஆனால் இந்த கேள்வியின் சூட்சுமமே, உங்களை நீங்கள் எவ்வளவு தூரம் புரிந்து கொண்டீர்கள் என்பது இல்லை. நீங்கள் எது வரை ‘நான்’ என்ற அந்த அடையாளத்தை கொண்டுள்ளீர்கள் என்பது தான்.
 
‘நான்’ என்றால் என் பெயர் மட்டும் தானா? இல்லை நான் பார்க்கும் வேலையா? இல்லை என் குணங்கள் தான் நானா? இப்படி கேட்க ஆரம்பித்தால் கேட்டு கொண்டே போகலாம். ஏனென்றால், இந்த உலகம் நமக்கு தரும் எந்த ஒரு அடையாளமும் நம்மை வரையறை செய்யாது. இப்படி ஆரம்பமாகும் தேடல்கள் முடிவில்லாமல் போகும் பயணங்கள் தான். ஆனால் நம்மை நாமே தேடி செல்லும் பயணங்கள் எவ்வளவு அழகானவை. எதற்கு அதை கண்டு அஞ்ச வேண்டும்? எத்தனையோ விஷயங்களை சோர்வில்லாமல் கற்றுகொள்ளும் நாம், நம்மை பற்றி கற்றுக்கொள்ள ஏன் தயங்குகிறோம்? அதன் தூரமும் தனிமையும் நம்மை அச்சுறுத்துகிறது. அப்பொழுது நம்மை கண்டு நாமே அஞ்சுகிரோமா?
 
இக்காலத்தில், அகங்காரம் (ego) என்பது ஒரு தவறான குணமாகவே கருத படும் ஒன்று. உண்மையில், அகங்காரம இல்லாத மனிதர்கள் மிக மிக அரிதாகவே காணப்படுகிறார்கள். மற்றவர் எல்லோரும் ‘நான்’ என்ற ஒரு வட்டத்துக்குள் சுற்றிகொண்டிருக்கிறோம். எவ்வளவு நல்லவராக இருந்தாலும் தான் ‘நல்லவர்’ என்று கருதுவது கூட ஒரு வித அகங்காரம் தான். அது தவறில்லை. அது நம்மை இயல்பான மனிதர்களாக இயங்க வைக்கும் சக்தி. நாம் நம்மை பற்றி என்ன நினைக்கிறோம், என்ன நம்புகிறோம் என்பதே நம் தலையெழுத்தை நிர்ணயிக்கும். ஒவ்வொரு படைவீரருக்கும் தான் வீரன் என்ற அகங்காரம் இல்லாமல் போனால் நாம் எப்படி நிம்மதியாக உறங்குவது? ஒவ்வொரு தாய்க்கும் தான் அன்பானவர் என்ற அகங்காரம் இல்லையென்றால் அவர்களை நம்பி வந்த பிள்ளைகளின் நிலைமை என்னவாகும்? எதிர்மறை இயல்புகளை தனக்குள் விதைத்து அது ‘நான்’ என்ற பொய்யான அகங்காரம் கொண்டு பாதை மாறிப்போனவர்களின் கதைகளை நாம் கேட்டதில்லையா?
 
அகங்காரம் என்ற சக்தியை சரியான பாதையில் கொண்டு செல்ல தெரிந்தவர்கள் வாழ்க்கையில் ஜெயித்து விடுகிறார்கள். மற்றவர்கள் சரியான புரிதல் இல்லாமல் குழப்பத்திலேயே வாழ்க்கையை நிறைவு செய்கிறார்கள்.
 
இந்த குழப்பத்தில் நாம் சிக்கிகொள்ளாமல் இருக்க என்ன செய்வது?

முதலில், நம்மை நாமே ஏற்றுகொள்ளும் தைரியம் வேண்டும்.

எந்த ஒரு குணத்தையும் நினைத்து அஞ்சுவதோ, வருந்துவதோ அதை பொய்யாக மாற்றப்போவதில்லை. அவற்றை பாடங்களாய் மாற்றி கொள்வதுதான் புத்திசாலித்தனம். சாக்கடைக்குள் இறங்கித்தானே சுத்தம் செய்ய முடியும்? சாக்கடை இல்லையென்று தாண்டி செல்வதால் அது மறைந்து விட போகிறதா? இப்படி நீங்கள் உங்களுக்குள் மாற்றங்களை நிகழ்த்திகொள்ளும்பொழுது உங்கள் வருத்தம் தானாகவே மறைந்து உங்களுக்குள் பெருமை பிறக்கும்.
 
அடுத்து, நம் உண்மையான அடையாளத்தை கண்டறிய வேண்டும். ஒவ்வொரு மனிதரும் தன் பிறப்பின் நோக்கத்தை உணர்ந்தால் அவர் மனம் தானாகவே அந்த உண்மையை தேடி பயணிக்க தொடங்கிவிடும். ஆனால், நம் நாகரீக சமுதையத்தில் பலரும் அப்படி ஒன்று இருப்பதை பற்றி நினைப்பது கூட இல்லை. இதற்க்கு காரணம், சிறிய வயதிலிருந்தே கற்பனைத்திரன்களும் தனித்திறமைகளும் முடக்கப்படுகின்றன.

இதற்க்கு பெற்றோரை மட்டும் காரணம் சொல்ல முடியாது. பிள்ளைகளின் நாட்டம் கண்டு திறமை வாய்ந்தவராய் வளர ஊக்குவிக்கும் எத்தனையோ பெற்றோர் உண்டு. ஆனால் சினிமா, தொலைக்காட்சி, ஊடகங்கள் என்று பலவும் அவர்கள் கற்பனைக்கு எதிரிகளாய் மாறிவிடுகின்றன. கற்பனைகளும் கேள்விகளும் அலையாய் மோதும் வயதில் சிந்திக்க வாய்ப்பில்லாத குழந்தைகள் பிந்நாளில் வாழ்க்கையின் அர்த்தம் கூட புரியாமல் ஏதோ கடனுக்கு வாழ்வதைப்போல் காலத்தை ஒட்டி கொண்டிருக்கிறார்கள்.
 
வாழ்க்கையின் நோக்கத்தை அறிவது அவ்வளவு எளிதான செயலில்லை. உங்களை பற்றி செரியான புரிதல் இல்லாமல் அதை கண்டுகொள்வது கடினம். சிலருக்கு இயற்கையாகவே சில திறமைகள் மேலோங்கி காணப்படும். சிலர் பல விஷயங்களை சோதித்து பார்த்து தான் தனக்கு எதிலே நாட்டமும் திறமையும் இருக்கிறது என்பது தெரியவரும். ஆனால் கண்டிப்பாக திறமைகள் இல்லாமல் பிறக்கும் மனிதர் மண்ணில் இல்லை. வாய்ப்பும் காலமும் அதை வெளிச்சம் காட்டும். அந்த வெளிச்சம் உங்கள் மீது விழும்பொழுது நீங்கள் அதற்க்கு தயாராக இருக்க வேண்டாமா? அது உங்களுக்கானதுதான் என்று தெரியாமலே நீங்கள் ஓடிவிட்டால் பின்பு அதிர்ஷ்ட்டமில்லை என்று விதியை பழித்து என்ன பலன்? உங்கள் அறியாமையால், விதியின் அன்பை உணராமல் குறை சொல்லும் பிள்ளையை போலல்லவா நீங்கள் ஆகி விடுகிறீர்கள்?

அழகான ஒரு வாழ்க்கை நமக்கு பரிசாக அழிக்கபட்டாலும், பரிசை பார்க்காமல் எங்கோ தூரத்தில் உங்களை தேடி கொண்டிருக்கிறீர்கள். அந்த பரிசை திறந்தால் நீங்கள் தான் இருப்பீர்கள். அதை திறக்க ஏன் அவ்வளவு தாமதம்? நீங்கள் எங்கே போக வேண்டும் என்று உணராமலே உங்களை தேடி கொண்டிருப்பீர்களா? மனம் சொல்லும் பாதைகளை திரும்பி கூட பார்க்காமல் யாரோ விரித்த செயற்கை பாதைகளில் எத்தனை நாட்கள் உங்களால் நடக்க முடியும்? அப்படி வெகுதூரம் நடந்தாலும் உங்கள் சுவடுகள் அங்கே பதிந்ததை நினைத்து நீங்கள் பெருமை படுவீர்களா? இல்லையெனில் போகாத பாதைகளை நினைத்து பெருமூச்சு விடுவீர்களா? மனிதர்களுக்கு மட்டும் உயிர் இல்லை. நம் நினைவுகளுக்கும் கனவுகளுக்கும் கூட உயிர் உண்டு. அவையும் ஒரு நாள் உங்களிடம் வந்து “நீ யார்?” என்று கேட்கும் முன்பு நாம் நம் உண்மையான அடையாளங்களை கண்டறிவோம்.

சிந்திப்போமா?

2010, மார்ச் மாதம் 27ம் தேதி எழுதியது
(என் முதல் கட்டுரை 🙂 )

 சிந்தனை என்பது மனிதர்களுக்கே உரிய ஒரு வரம். புராண காலங்களில் நம் நாட்டு மனிதர்கள் எவ்வளவு சிந்தித்திருக்க கூடும்? வேதங்கள், சூத்திரங்கள்,  கலாசாரம், நாகரீகம்… எதுவும் வானத்தில் இருந்து விழவில்லை. எல்லாமே உங்களைப்போல் என்னைப்போல் மனிதர்களின் சிந்தனைகள் தான். இந்த ஆண்டில் இருந்து ஒரு 30 வருடங்கள் கடந்து சென்றாலும், மனிதர்களின் சிந்தனை திறன் அவ்வளவு வலியதாக இருந்தது. தொலைக்காட்சியும், சினிமாவும் நம் கலாச்சாரத்தை சீர் கெடுத்ததோ இல்லையோ… நிச்சயமாக நம் சிந்தனை திறனை நிறையவே சீர் கெடுத்து விட்டது.

 
சிந்தனையை பற்றி சிந்திக்கும் முன்… இன்று வாழ்க்கையின் நான்கு நிலைகளில் இருக்கும் மனிதர்களில் பெரும்பாலானோர் எப்படி எப்படி சிந்திக்கிறார்கள் என்று ஒரு சுருக்கம் –
 
1. “ஓடி விளையாடு பாப்பா” என்று சொன்ன பாரதி இன்று இருந்திருந்தால் அவருக்கு எதிராக ஒரு பொது நல வழக்கே தொடர்ந்து இருப்பார்கள். அந்த அளவுக்கு நம் சமூகத்தில் 
பிள்ளைகளை படிப்பின்… இல்லை இல்லை… மதிப்பெண்களின் பிடியில் சிக்க வைத்திருக்கிறோம். இன்னும் சில குழந்தைகள் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தள்ளப்பட்டு படும் அவஸ்தைகளை நான் விவரிக்க தேவை இல்லை. இயற்கையாகவே கருணை உணர்வுடன் பிறக்கும் குழந்தைகள் ‘போட்டி’யின் அறிமுகத்தால் சுயநலத்துடன் சிந்திக்க தொடங்குகிறார்கள். அதை விட கொடுமை… பெரியவர்களை போல் அவர்களை சிந்திக்க சொல்வது.
 
2. பிள்ளைகள் கூட அவ்வப்பொழுது புதிதாக, அழகாக ஏதாவது சிந்தித்து மனதை விரிவுப்படுத்தி கொள்வார்கள். பெரியவர்களின் சிந்தனைகள் எல்லாம் சாக்பீஸ் வட்டத்துக்குள் சிக்கிய பூச்சியை போல் தான். நமக்கு புரிந்த வட்டத்தை தாண்டி போனால் ஏதோ பெரிய விபரீதம் நேர்ந்து விடும் 
போன்ற ஓர் உணர்வு பலருக்கு உண்டு. இதில் நல்லவர் தீயவர் என்று எந்த பேதமும் இல்லை. பிறருக்காக யோசிப்பவர் கூட மற்றவர் பற்றி  தனக்கு இருக்கும் புரிதலை மையமாக வைத்தே யோசிக்கிறார்.
 
3. வாழ்க்கையில் கொஞ்சம் நடுநிலை அடையும் தருணங்களில் இருப்பவர்கள், இளமை காலத்தின் எல்லையை தொட்டு கொண்டிருப்பவர்கள் தனக்கு எல்லாம் தெரிந்ததென்று நினைத்து கொண்டு சிந்திப்பதையே ஏதோ தேவை இல்லாத வேலையை போல் நினைக்க தொடங்கி விடுகிறார்கள்.
 
4. முதியோர்களுக்கு பொதுவாக ஒரு சிந்தனை உண்டு. தன் காலத்தை போல் இந்த காலம் இல்லை என்று, புதிதாக எதையும் ஏற்க்க மறுப்பார்கள். சிலர் அதை வெளிப்படையாகவே சொல்வார்கள். அவர்களை பழிக்க வேண்டாம். அது அவர்கள் தவறில்லை. அது இயற்கையாகவே அந்த வயதிற்கு உரிய சிந்தனை  தான். நாமும் முதிர்ச்சி அடையும் போது அப்படித்தான் யோசிப்போம்.
 
இந்த நான்கு நிலைகளிலும் ஒரு பொது விஷயம் உண்டு. சிந்தனை என்றாலே அது நினைவுகளை சார்ந்தே செல்வது ஒரு போக்கு. நாம் பார்த்தது, கற்றது, கேள்விபட்டது, இப்படி பல விஷயங்கள் நம் சிந்தனைகளை ஆட்டிப்படைக்கும். எந்த சிந்தனையும் விதை ஆவதில்லை. நாமே மரம் வளர்க்காமல் ஏற்கனவே இருக்கும் மரத்தில் இருந்து பழங்களை பறித்து சாப்பிட்டு விட்டு நிம்மதியாக சென்று விடுகிறோம். மனதும் அதற்க்கு மேல் எதுவும் கேட்பதில்லை. கேட்டாலும் நாம் தருவதில்லை. கற்றல் என்றால் ஒப்பித்தல் என்று நினைத்து வளரும் தலைமுறைகளுக்கு உலகத்தின் வரலாறு தான் தெரியும். உலகிற்கு ஒரு எதிர்காலம் இருக்கிறது என்றும், அதில் தாங்கள் எப்படி ஒன்றிப்போவோம் என்றும் அவர்கள் எப்படி யோசிப்பார்கள்? நாளை என்பது தூங்கி எழ வேண்டிய ஒரு நாளாகவே போகிறது.
 
சிந்தனைகள் இந்த அளவுக்கு வீரியம் இழந்து போனதற்கு காரணங்கள் அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் பழி சொல்வது இந்த கட்டுரையின் நோக்கமில்லை. நம் ஒவ்வொருவரும் இப்பொழுது எப்படி சிந்திக்கிறோம் என்று புரிந்துகொண்டு, அதை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று வழிகள் காண வேண்டியது அவசியம்.
 
சிந்தனையை பற்றி புரிந்து கொள்ளும் முன், மனிதனுக்குள் இருக்கும் அடுக்குகளை (layers) பற்றி வேதாந்தம் நமக்கு கற்ப்பிப்பதை புரிந்து கொள்வோம். அதென்ன அடுக்குகள்? எல்லா மனிதர்களுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதை தீர்மானிப்பது இந்த மூன்று அடுக்குகளின் சதவிகித வேறுபாடு (percentage distribution).
 
1. முதலாவது, நம் உடல் – விரிவாக பார்த்தால் நாம் வாழும் பௌதீக உலகம் (physical or material world). இந்த அடுக்கை மையப்பட்டு வாழ்பவர்கள்  பணம், பொருள், புகழ் போன்ற விஷயங்களை அதிகம் விரும்புவார்கள். அவரை சுற்றி இருக்கும் உலகத்தில் நிகழும் மாற்றங்கள் அவருக்கு நிறைய பாதிப்பை ஏற்படுத்தும்
 
2. இரண்டாவது, நம் மனம் – உணர்ச்சிகள் உற்பத்தியாகும் இடம். விரிவாக இதை கனவு உலகம் (dream world) என்று சொல்லாம். பொதுவாக கனவுகளில் வாழ்பவர்களை உணர்ச்சிகள் ஆள்ந்துகொண்டிருக்கும். மன நிம்மதிக்காக சிறு சிறு விஷயங்களை விட்டுத்தர தயங்க மாட்டார்கள். 
 
3. மூன்றாவது, நம் புத்தி – நம் உடலும் மனதும் உட்கொள்ளும் விஷயங்கள் நல்லதா கெட்டதா, சரியா தவறா என்று தீர்மானிக்கும் வேலை இங்கே நடக்கிறது. இந்த அடுக்கில் வாழும் மனிதர்கள் பொதுவாக உணர்ச்சிகளின் மேல் பற்றில்லாமல் காணப்படுவார்கள். அவர் சுயனலக்காரராக இருந்தால் அவர் அறிவை வைத்து பலருக்கும் தீங்கு விளைவிக்கும் அல்லது ஏமாற்றும் திறனுடன் இருப்பார்.
 
யாரும் ஒரே அடுக்கை சார்ந்து இருப்பதில்லை. ஒன்று மேம்பட்டு இருக்கும். மற்ற இரண்டு கொஞ்சம் குறைவாக இருக்கும். எல்லாம் சமமாக இருப்பவர்கள் கூட உண்டு. இப்படி பல பிணைப்புகளில் பல வித மனிதர்களை நாம் பார்க்கிறோம்.
 
ஒரு மனிதன் நலமாக வாழ வேண்டும் என்றால், அவன் செயல்களின், எண்ணங்களின் நிர்வாகம் மேலிருந்து கீழ் வர வேண்டும். அதாவது, உடல் மற்றும் மனதை அறிவு ஆள வேண்டும். ஆனால் இன்று கீழிருந்து மேலே போகிறது நிர்வாகம். அதாவது, இந்த பௌதீக உலகில் நம் தேவைகள் மற்றும் ஆசைகள் எல்லாம் பூர்த்தியாகவே நாம் பாடுபட்டு வாழ்க்கையின் பெரிய பகுதியை தொலைத்து விடுகிறோம். நம் மனமும் அறிவும் அதை பற்றியே யோசித்து பழகுகிறது. இது மட்டும் வாழ்க்கை இல்லை என்று தெரியவரும் நேரம், வாழ்க்கை முடிந்து விடுகிறது. இரண்டாவது அடுக்கில் இருப்பவர்களும் கூட அப்படித்தான். அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும், உணர்ச்சிகளால் தன்னை தானே மிகவும் வருத்தி கொள்வார்கள். தன் மனதில் இருக்கும் கனவு உலகம் தான் முழுமையானது என்று நம்பி நிஜ உலகத்தின் உண்மைகளை தொலைத்து விடுகிறார்கள். அறிவை சார்ந்து வாழ்பவர்களுக்கு பௌதீக உலகத்தின் பிரச்சனைகளோ, உணர்ச்சிகளின் வீரியங்களோ பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. எல்லாவற்றையும் ஒரு நிகழ்வாகவே ஏற்று, அடுத்த கட்டத்தை பற்றி யோசிப்பார்கள்.
 
இதில் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. எல்லோரும் ஒரு அடுக்கில் இருந்து இன்னொரு அடுக்குக்கு பயணிக்க திறமை உடையவர்கள் தான். சந்தர்ப்பமும் சூழ்நிலையும் எதையும் கற்றுத்தரும், யாரையும் மாற்ற கூடும். இந்த மூன்றையும் கடந்து சென்று நம் அடையாளத்தை முற்றிலுமாக துறப்பது தான் மனித உயிர்களுக்கு தரப்படும் இலக்கு. இப்படி கடந்து செல்பவர்களை தான் முனிவர்கள் என்கின்றோம். ஆனால் இன்று தோன்றும் முனிவர்கள் எல்லாம் அப்படி இருக்கிறார்களா  என்பது வேறு விஷயம்.
 
இதை விவரிக்க காரணம், இந்த மூன்று அடுக்குகளை பற்றி படித்த பின்பு, சிந்தனை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். நாம் எதுவரை நம் தேவைகள் மற்றும் உணர்ச்சிகளை சார்ந்தே சுற்றிக்கொண்டு இருக்கிறோமோ, அதுவரை சுயநல சிந்தனைகளில் இருந்து நாம் தப்பவே முடியாது. சுயநலம் என்பது உங்களை பற்றி நினைப்பது மட்டும் அல்ல. எதையும் இன்னொருவர் பார்வையில் பார்க்க மறுப்பதும் சுயனலமாகும். அது நல்ல விஷயமாக இருந்தாலும் என்ன? ஒருவர் உங்களை பற்றி விமர்சனம் செய்தால் அதில் உண்மை இருக்கிறதா என்று யோசிக்காமல், நீங்கள் மிகவும் நல்லவர் என்று நினைத்து அதை புறக்கணிப்பது கூட ஒரு விதத்தில் சுயநலம் தான்.
 
சிந்தனை திறன் வலுவாக முதலில் நாம் செய்ய வேண்டிய வேலை, மூன்றாம் அடுக்குக்கு நம்மை நாமே எடுத்து செல்வது. உடலை சார்ந்து வாழ்பவர்கள் முதலில் உணர்ச்சிகளை மையபடுத்தி சிந்திக்க வேண்டும். பின்பு மனதை கட்டுப்படுத்த கற்று கொண்டு அறிவின் ஆற்றலை மேம்படுத்த வேண்டும். இது நாள் கணக்கில், மாதக்கணக்கில் நடக்கும் விஷயங்கள் இல்லை. நம் முயற்சியை பொறுத்து சில பல வருடங்கள் வரை  ஆகலாம். இந்த பயணத்தில் அவ்வளவு எளிதாக நம் பற்றுகளை விட்டு விலக இயலாது என்பதால் நமக்கு  உதவுவதற்காக அக்காலத்திலே யோகா (உடல் பற்று), பிராணயாமா மற்றும் தியானம் (மனப் பற்று) போன்ற விஷயங்களை உருவாக்கினார்கள். இன்று எல்லாம் பௌதீக உலகத்தை சமாளிக்க பயன்படுவதோடு சரி. அதற்காக நீங்கள் யோகாவும் தியானமும் பழக வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. முயற்சி என்பது முழுக்க முழுக்க உங்கள் முடிவை சார்ந்ததாக இருக்க வேண்டும். இதை விவரிக்கும் வேதாந்தம் கூட எதையும் கண்மூடித்தனமாக நம்பாமல், ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்கவே சொல்கிறது. யாரோ ஒருவர் சொல்கிறார் என்று எண்ணி செய்யும் எந்த ஒரு காரியத்திலும் உங்கள் முழு சக்தி வெளிவராது. இதை சோதித்து பார்க்க வேண்டுமென்றால், குழந்தைகளை பாருங்கள். குழந்தைகளின் சுத்தமான மனங்களில் கற்பனை திறன் மற்றும் சுய சிந்தனைக்கான அரிச்சுவடு இயற்கையாகவே வழுவாக இருப்பதால், அவர்கள் எதை செய்தாலும் முழு மனதோடு செய்வார்கள். அவர்கள் அதே மன சக்தியுடன் வளர்வார்கள். நாம் நம் கருத்தகளை திணித்து இப்படி தான் யோசிக்க வேண்டும் என்று சொல்லி பழக்காத வரை அது கலையாது. இது எதிர்காலத்தில் அவர்களுக்கு மனதளவில் நல்ல முதிர்ச்சியையும் அறிவாற்றலையும் உருவாக்கும்.
 
சரி, இப்பொழுது அறிவு கூர்மை உள்ளவராக மாறி விட்டீர்கள். இது போதுமா? இப்பொழுது உங்கள் சிந்தனைகள் எல்லாம் முழுமையாகி விடுமா? நீங்கள் இன்னும் ஒரே ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டம். இந்த கட்டத்தில் எவ்வளவோ அறிவாளிகள் தன் நிலை புரியாமல் தொலைந்து போயிருக்கிறார்கள். சிலர் வாழ்வின் மேல் வெறுப்பு வரும் அளவுக்கு கூட சென்றுவிடுவார்கள். இது, நீங்கள் எப்படி சிந்திகிறீர்கள், எவ்வளவு சிந்திகிறீர்கள் என்பதை விட, நீங்கள் எதை பற்றி சிந்திகிறீர்கள் என்று முடிவு செய்ய வேண்டிய கட்டம். இதுவும் யாரும் யாருக்கும் கற்பிக்க முடியாத விஷயம். இதில் சரியாக முடிவெடுக்க, நீங்கள் சற்று இறங்கி வந்து, உங்கள் மனதிடம் கொஞ்சம் பேச வேண்டும். இந்நிலையில் இருப்பவர்களை அறிவு ஆள்வதால், மனம் சாந்தமாகவே இருக்கும். சாந்தாமான மனதில் எப்பொழுதும் அல்பமான விஷயங்களோ, பொய்யான நினைவுகளோ தோன்றாது. அந்த நொடி, அது உங்களிடம் உண்மை பேசும். உங்கள் திறனுக்கும் குணத்திற்கும் உங்கள் அறிவை எந்த திசையில் செலுத்த வேண்டும் என்று அது சொல்லும். அது தேவையா இல்லையா என்பதை மட்டும் உங்கள் அறிவை முடிவெடுக்க விடுங்கள்.
 
இவ்வகையில் வளரும் சிந்தனைகள் எல்லை கோடுகளுக்குள் அடங்காது. ஏனென்றால் உங்களுக்கு இதுவே சரி என்று நீங்கள் முடிவு செய்த பின் அச்சங்களும் குழப்பங்களும் தானாகவே மறைந்து விடும். இப்படி ஒரு கட்டத்தில் தான் கலைஞர்கள், சேவையாளர்கள், விஞ்ஞானிகள் போன்றவர்கள் தங்களை ஏதோ ஒரு பொதுவான நலனுக்காக (greater good) அர்ப்பணிக்க தயாராகிறார்கள். விஞ்ஞானிகள் ஏன் குடும்பத்தை கூட கவனிக்காமல் மணிக்கணக்கில் ஆராய்ச்சி செய்கிறார்கள்? சேவையாளர்கள் ஏன் உடல்நலத்தை கூட கவனிக்காமல் 
சமுதாயாதிர்க்காக உழைக்கிறார்கள்? அதிக திறன் கொண்ட கலைஞர்கள் ஏன் தனித்தே படைக்க விரும்புகிறார்கள்?  அவர்கள் பொறுப்பில்லாதவர்கள் இல்லை. அவர்கள் தங்கள் சுயநல பற்றுகளை எல்லாம் கடந்து தத்தம் பாதைகளில் தங்களை அர்ப்பணித்து கொண்டவர்கள். இது உதாரணம் மட்டுமே, இதற்காக நீங்கள் பெரிய கலைஞராகவோ, செவகராகவோ இருக்க தேவையில்லை. நாம் சரியாக முடிவெடுத்தால், எதை பற்றி சிந்தித்தாலும் அது தெளிவும் வீரியமும் கொண்டதாக இருக்கும். உங்கள் சிந்தனைகள் சமுதாயத்திற்காக இருக்கட்டும், குடும்பத்திற்காக இருக்கட்டும், உங்களை நீங்களே மேம்படுத்தி கொள்வதாக கூட இருக்கட்டும். அது முக்கியம் இல்லை, சரியான இடத்தில் இருந்து உங்கள் சிந்தனை கிளம்புகிறதா என்பதே முக்கியம். இதில் உங்களுக்கு சில கனவுகள் தோன்ற கூடும். அதை விட்டு விடாமல் பின் தொடருங்கள். அந்த கனவுகள் ஆகாய கோட்டைகள் இல்லை. அது உங்கள் எதிர்காலத்தை சொல்லும் கனவுகள். அதை மனதில் கொண்டு முயற்ச்சித்தால் நீங்கள் என்றும் கலைத்து போகமாட்டீர்கள். ஏனென்றால், அது யாரும் போதிததில்லை, யாரும் கர்ப்பித்ததில்லை. அது உங்கள் கனவு, உங்கள் எதிர்காலம். அதில் உங்கள் உடல் மனம் அறிவு அனைத்துமே ஒன்றி போய் இருக்கும்.
 
வெறும் சிந்தனை தானே, அதனால் என்ன பலன் என்று நீங்கள் யோசித்தால்… உங்கள் சிந்தனை திறனை தட்டி எழுப்புவதால் உங்களுக்கு மட்டும் நலன் இல்லை. உங்கள் குடும்பம், நண்பர்கள், சமுதாயம், இப்படி உங்களை சார்ந்தவர்கள் எல்லோருக்கும் அந்த சிந்தனைகளின் சக்தியில் ஒரு துளியாவது போய் சேரும். சிந்தனை மனிதனின் தலையெழுத்தையே மாற்றும் சக்தி கொண்டது. அதனால்தான் எல்லா மதங்களிலும் நல்ல சிந்தனைகளை போற்றுகிறார்கள், போதிக்கிறார்கள். நீங்கள் எப்பொழுது முழு திறனுடன் சிந்தித்து செயல்படுகிரீர்களோ, அப்பொழுதே முழு மனிதராக தகுதி கொள்கிறீர்கள். இப்படி எல்லோரும் பற்றில்லாத சிந்தனைகளுக்கு மதிப்பு கொடுக்க ஆரம்பித்தால், உலகின் பல பிர்ச்சனைகள் தீர்ந்து விடும். எல்லோரும் வலுவாக சிந்திக்கும் உலகத்தில்  கொலை, கொள்ளை, சண்டைகள், போர்கள்… இதெல்லாம் எங்கிருந்து தோன்றும்? அதையும் கொஞ்சம் சிந்திப்போம்…

ஞானம்

2010, மார்ச் மாதம் 24ம் தேதி எழுதியது
தோல்வியில்
ஞானம் காண்பவன்
மறு முறை அழுவதில்லை
வெற்றியிலும்
ஞானம் காண்பவனுக்கு
தோல்வியென்று எதுவுமில்லை

உயிரில் வெளிச்சம் – IX

2010, மார்ச் மாதம் 21ம் தேதி எழுதியது
விழிக்காமல்
விழித்திருப்பாயோ 
விழியே
உன் வழி பாராமல்
என்னை பார்க்கிறேன் 
என் உயிர் வழியே