Archive for the ‘மௌனம் – சந்தோஷம்’ Category

கடவுள் வருகிறார்

2010, ஜனவரி மாதம் 6ம் தேதி எழுதியது

மண்ணை தீண்டாமல்
என்னை தீண்டிய
மழைத்துளிகள்

கண்ணை மட்டும்
தழுவாமல் போன
காலைத்தென்றல்

வாசல் கடந்தால்
வருகை தரும்
வெய்யில் வருடல்

உறவும் உரிமையும்
மாயைகளாய் மாற்றும்
மழலை சிரிப்பு

எதையும் உணராது
நிற்காமல் போனால்
பாவமல்லவா
தினம் தினம்
இப்படித்தான்
என்னிடம் பேச
கடவுள் வருகிறார்

Advertisements

உயிரில் வெளிச்சம் – V

2010, ஜனவரி மாதம் 3ம் தேதி எழுதியது

நேற்று வரை
நான் ரசித்த இசை
இன்று
தூரத்தில் ஒலிக்கிறது

காற்றும் காலமும்
எனை நீங்கி போகும்
மாயங்கள் ஏனோ
நான் காண்கிறேன்

முன்போ என்னை
வாட்டி வதைத்த கண்ணீர்
புரியாத ஆனந்தத்துடன்
தடைகளை உடைத்து
வர துடிக்கிறது

வலிகள் எல்லாம்
பொய்யாய் போனது
எரிபொருளாய் இருந்த
உயிரில் இன்று
ஒரு வைரம் தோன்றியது

உயிரில் வெளிச்சம் – III

2009, திசெம்பர் மாதம் 19ம் தேதி எழுதியது

கனவுகள் என்னுள்
கரைந்து போக
கடவுளின் கனவில்
நானும் கரைகிறேன்

கேள்விகள் எல்லாம்
மெல்லமாய் மறைய
விடைகளின் விடியல்
என் உயிரின் உள்ளே

நகர்ந்து போ வானமே
உன்னை தொட்டு விடுவேன்
நின்று விடு மழையே
உன்னை நனைத்து விடுவேன்

தீர்ந்து விடு கண்ணீரே
வாழ்வில் ஒரு குறையில்லை
ஓய்ந்து விடு மனமே
உயிரில் இனி பிழையில்லை

உயிரில் வெளிச்சம் – II

2009, திசெம்பர் மாதம் 13ம் தேதி எழுதியது

கேட்கிறது கேட்கிறது
அந்த நிலவில் ஒரு பாடல்
இந்த இரவின் சப்தம் ஓயுமா
நானும் நிலவுடன் பாட வேண்டும்

சிரிக்கிறது சிரிக்கிறது
மரங்கள் எல்லாம் எனை நோக்கி
இந்த காலடி சப்தங்கள் ஓயுமா
நானும் மரங்களுடன் சிரிக்க வேண்டும்

அழைக்கிறது அழைக்கிறது
வானம் என் பேர் சொல்லி
இந்த காற்று கொஞ்சம் ஓயுமா
நானும் வானை அழைக்க வேண்டும்

சொல்கிறது சொல்கிறது
உயிரும் எனக்குள் ஏதோ
இந்த மனமும் கொஞ்சம் ஓயுமா
நானும் உயிருடன் பேச வேண்டும்

மழலை தூது

2009, மே மாதம் 24ம் தேதி எழுதியது

என் 100வது கவிதையை போலவே என் 200வது கவிதையும் என் மனம் பறித்த குட்டி கவிதை(ரீமா)க்கு சமர்ப்பணம் 🙂 (தலைப்பை சொன்ன ரீமாவின் விசிறியான ஜனாவுக்கு நன்றி…)

புகைப்படம் மட்டும் பார்த்தாலும்
உன் சிரிப்பின் தூய்மை
மறையவில்லை

ஒலியாய் மட்டும் வந்தாலும்
உன் குரலின் இனிமை
குறையவில்லை

தூதாய் மட்டும் கேட்டாலும்
உன் செய்கை இன்றும்
அலுக்கவில்லை

நாட்கள் உன்னை வளர்த்தாலும்
உன் நினைவுகள் உன்னை
வளர்க்கவில்லை

முழுமை

2009, பிப்ரவரி மாதம் 27ம் தேதி எழுதியது

வாகனத்தின்
கண்ணாடி திரையின் பின்
என்னை பார்த்து
சிரித்தது குழந்தை
நிறம் மறைத்த முகம்
மனதில் முழுமை கண்டதால்
மனதை முழுமை செய்ததா

நிறங்கள்

2009, பிப்ரவரி மாதம் 21ம் தேதி எழுதியது

மனம் லேசாக
உடன்வந்த நீலம்
என்னுயிர் தோழி

புரியாத தென்றல்
ஏனோ பிடித்த ஊதா
கேலி செய்யும் தங்கை

கோபம் கலந்த அன்பால்
குழப்பி சென்ற பழுப்பு
சண்டை போடும் அண்ணன்

சற்று பயந்தும்
மறுக்க முடியா சிவப்பு
கரம் கொடுக்கும் தந்தை

வாழ்ந்த போதும் வீழ்ந்த போதும்
ஓயாத சூரிய மஞ்சள்
வரம் கொடுக்கும் தாய்

நிறங்கள் எல்லாம்
வெளிகொடுத்த வெள்ளை
நான் உணர்ந்த பாசம்

நம்பிக்கை – II

2009, பிப்ரவரி மாதம் 7ம் தேதி எழுதியது

வானம் தொலைத்த வானவில்லை
மனதில் வரைந்து வைத்தேன்
இருளில் அதை மிகை செய்தேன்
அந்த வானம் மின்னி நின்றதா

அம்மா

2009, ஜனவரி மாதம் 11ம் தேதி எழுதியது

என்னை
குழந்தையாக
நினைவில் கொண்டு
சிரித்ததில் கண்டேன்
குழந்தையாக
உன்னை

பொருள்

2009, ஜனவரி மாதம் 10ம் தேதி எழுதியது

மலர் ஒன்று
கண்ணை பரித்ததிலே
மேகக்கூட்டம்
வானை மறைத்ததிலே
கனவொன்றை
நினைவூட்டும் காட்சியிலே
மழையும் மழலையும்
மனதை வருடி சென்றதிலே
வடிவத்தால் வரிகளால்
இசையொன்று உயிரில் கலந்ததிலே
மனத்தடையை
உடைத்து வழிந்த நீரினிலே
காரணம் புரியும் முன்
இதழ்கள் கண்ட விரிவினிலே
அச்சம் பொழிந்த சாரலில்
காக்கும் அன்பெனும் குடையிலே
பாராமல் வந்த நிகழ்வொன்று
பதித்து சென்ற குழப்பத்திலே
விடைகள் ஆயிரம் சூழ
வினா தேடி கரைந்ததிலே
நெஞ்சம் தேட மறுத்த பொருள்
நான் அறிய மறந்த பொருள்