Archive for the ‘மௌனம் – அன்பு’ Category

அஹிம்சை

2010, ஓகஸ்ட் மாதம் 16ம் தேதி எழுதியது

ஒரு கன்னத்தில் அடித்தால்
மறு கன்னம் காட்டு
அஹிம்சை வழி
பழகி பழகி தோற்கிறார்
மழலையின் தந்தை

2010, ஜூன் மாதம் 18ம் தேதி எழுதியது

நீநேன்றும் நானென்றும்
இருக்கும் உலகில்
மழை கூட பகையுனக்கு
நாம் என்று
வாழும் உலகில்
தீ கூட துனையுனக்கு

அன்பு

2010, மே மாதம் 27ம் தேதி எழுதியது

வாரி வாரி கொடுத்தாலும்
வானின் மீது
மழைத்துளி
விழுவதுண்டோ

அவளும் ஒரு தாய்

2010, ஏப்ரல் மாதம் 11ம் தேதி எழுதியது
இசையை பற்றி கேட்ட பிள்ளையிடம்
பாடலொன்று கற்று கொடுத்தாள்
 
மரங்களை பற்றி கேட்ட பிள்ளையிடம்
பொறுமையை கற்று கொடுத்தாள்
 
நிலவை பற்றி கேட்ட பிள்ளையிடம்
மாயங்கள் கற்று கொடுத்தாள்
 
கனவை பற்றி கேட்ட பிள்ளையிடம்
நம்பிக்கையை கற்று கொடுத்தாள்
 
ஆனால்
சோற்றை கேட்ட பிள்ளையிடம்
வேறென்ன சொல்வது
பசியையும் கற்று கொடுத்தாள்
ஏழைத்தாய்

அன்பு

2010, ஜனவரி மாதம் 28ம் தேதி எழுதியது

துரத்தி துரத்தி தடுத்தது
மேகக்கூட்டம்
அந்த கார்மேகத்தையும்
ஒளிர வைத்து சென்றது
நிலவல்லவா

பாதங்கள் படாத பாதை

2009, திசெம்பர் மாதம் 30ம் தேதி எழுதியது

எத்தனை சுகங்கள்
எத்தனை வரங்கள்
கொஞ்சம் கற்கள் தூவும்
சர்க்கரை கணங்கள்

எழுவோருக்கும் அழகுண்டு
விழுவோருக்கும் மதிப்புண்டு
எல்லோருக்கும் நிறைவுண்டு
தொலைந்தாலும் இங்கே வழியுண்டு

பரிசாக வரும் பாலைவனம்
ஏற்றுக்கொண்டால்
வாழ்வை நிரப்பும்
பூங்காவனம்

அழகாய் தொடரும்
பாதை ஒன்று
அதன் தொடக்கத்தில் சில
முட்கள் உண்டு

மனிதனாய் பிறப்பது
ஆசி ஆகும்
அந்த ஆசியிலே இது
அதிர்ஷ்ட்டம் ஆகும்

அன்பு உன்னில் வளர்ந்தால்
நாளை மண்ணில் பரவும்
இதை மெய்யென்று தானே
உணரவில்லை எவரும்

சுயநலம் – II

2009, நவம்பர் மாதம் 16ம் தேதி எழுதியது

இடி வந்தால்
காதை மூடுகிறான்
மின்னல் வந்தால்
கண்ணை மூடுகிறான்
மழை மட்டும்
வந்தால் மகிழ்கிறான்
சுயநலம் பார்த்தே
பழகிய மனிதனின்
முகம் கூட பார்க்காமல்
பொழிகிறது வானம்

அழகான அவமானம்

2009, ஒக்ரோபர் மாதம் 25ம் தேதி எழுதியது

கோடி மக்கள்
அறிந்தவரோ
கண்டவர் எல்லாம்
மலைத்தவரோ
புகழுக்கே புகழை
தந்தவரோ
ஒரு நொடியில்
தோற்றுப்போனார்
தாயின் ஸ்பரிசம்
இல்லையென்று
அறிந்து அழுத
குழந்தையிடம்

சிறகு

2009, ஓகஸ்ட் மாதம் 29ம் தேதி எழுதியது

ஆறு வயதே நிறைந்து இருந்த விஜய்யின் சின்ன கண்களில் ஒரு பெரிய சந்தேகத்தின் நிழல் மெதுவாக விரிந்தது. வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு வானத்தை பார்த்தபடியே ஏதோ யோசித்து கொண்டிருந்தான்.

வலதுபுறம் யாரோ நடந்து வரும் சப்தம் கேட்க, திரும்பி பார்த்தான்.

அண்ணன்!

“அண்ணா! எனக்கு ஒரு சந்தேகம்…”

“ம்ம்…”

“நா பறக்கணும்னு நினைக்கிறன். எனக்கு சிறகு வளருமான்னா?”

“லூசு மாதிரி பேசாதே… போய் வேற ஏதாவது செய்”

அண்ணன் ஏன் இப்படி சொல்கிறான் என்று விஜய்க்கு புரியவில்லை. அவன் சந்தேகமும் தீரவில்லை.

ஒரு வேலை அண்ணனுக்கும் பதில் தெரியவில்லையோ? வேறு யாருக்கு தெரியும் என்று நினைத்து கொண்டு இருக்கும்போதே அந்த வழியாக நடந்து வந்தார் அவன் பள்ளி வாத்தியார். அவரை பார்த்ததும் விஜய்யின் முகம் மலர்ந்தது. பையன் தன்னிடம் ஏதோ சொல்ல வருகிறான் என்பதை உணர்ந்த வாத்தியார் தன் நடையை நிறுத்தி கொண்டு அவனை பார்த்தார்.

“அய்யா! எனக்கு ஒரு சந்தேகம்! தீர்த்து வெய்ப்பீங்களா?”

“சொல்லுப்பா…” பிள்ளையின் ஆர்வத்தை நினைத்து மகிழ்ச்சியுடன் பதில் சொல்ல தயாரானார்.

“அய்யா… நா வானத்துல பறவை பார்த்தேன். அது மாதிரி எனக்கு பறக்கணும்னு ஆசை. எனக்கு சிறகு வளருமா?”

விஜய்யிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்ப்பார்க்காத வாத்தியார் சில நொடிகள் யோசித்து விட்டு சொன்னார்.

“வானத்துல பறக்கிற பறவையெல்லாம் பறந்தா தான் அது இந்த உலகத்துல பிழைக்க முடியும். அதனால அதுக்கு சிறகு தேவை. உனக்கு அது தேவையில்லை”. இதை சொன்ன பிறகு விஜய்யிடம் இருந்து பதில் இல்லை. பையனின் சந்தேகத்தை தீர்த்து விட்டோம் என்று நினைத்து ஒரு சிறிய கர்வத்துடன் வாத்தியார் அங்கிருந்து விடைபெற்றார்.

வாத்தியார் சென்ற பிறகும் விஜய் யோசனையில் இருந்தான். அவர் சொன்னது ஏதோ கொஞ்சம் புரிந்தது போல் உணர்ந்தான். அனால் அவன் சந்தேகம் மட்டும் தீர்ந்தபாடில்லை.

வெளியே இருள் வர துவங்கியது. இன்னும் கொஞ்ச நேரம் வாசலில் நின்று கொண்டிருந்தால் வீட்டில் திட்டுவார்கள் என்று பயந்த விஜய், உள்ளே ஓடினான்.

தொலைக்காட்சியின் சப்தம் கேட்டு அதன் பக்கம் சென்ற அவன், அப்பா அதை உற்று பார்த்து கொண்டிருப்பதை கவனித்தான். அப்பாவை பார்த்தவனுக்கு ஒரு யோசனை. அவரை கேட்டால் என்ன?

“அப்பா! எனக்கு ஒரு சந்தேகம்…” குழப்பத்துடன் சொன்னான்

“என்ன…” திரையிலிருந்து பார்வையை நகர்த்தாமல் அப்பா கேட்டார்.

“எனக்கு பறவை மாதிரி பறக்கணும்னு ஆசைப்பா. எனக்கு சிறகு வளருமா?”

“அதெல்லாம் நடக்காது… உள்ள போ… ஹோம்வர்க் முடிச்சியா?”

“முடிச்சுட்டேன்ப்பா” வருத்தத்துடன் பதில் சொன்னான் விஜய்

அப்பா எதுவும் நடக்காது என்று சொன்னதை நினைத்து மனம் உடைந்து போனான். அவனால் அதை ஏற்க்க முடியவில்லை. ஒரு வேலை அப்பா அவன் தொல்லை செய்கிறான் என்று நினைத்து அவனை விரட்ட அப்படி சொன்னாரோ?

திடீரென்று அவனுக்கு ஒன்று தோன்றியது. அம்மாவிடம் கேட்கவேயில்லையே! நிச்சயமாக அம்மாவுக்கு பதில் தெரிந்திருக்கும் என்று முடிவு செய்தவன் அம்மாவை தேடி ஓடினான்.

“அம்மா…”

“என்னடா?”

“அம்மா எனக்கு ஒரு சந்தேகம்”

“என்ன கண்ணா சந்தேகம்? சொல்லு”

அம்மா அவன் தலையை வருடிய படியே கேட்க, கொஞ்சம் தைரியத்துடனே கேட்டான்…

“அம்மா! இனிக்கு நா வானத்துல பறவை பார்த்தேன். அத பார்த்துட்டு எனக்கும் பறக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கும்மா. எனக்கு சிறகு வளருமா? யாரும் செரியா பதில் சொல்ல மாட்டேன்கிறாங்க. அப்பா அது நடக்காதுன்னு சொல்றாரும்மா.”

சிறிது நேரம் விஜையை வேடிக்கையுடனும் பிரியத்துடனும் பார்த்து விட்டு அம்மா சொன்னார் “அப்படி எல்லாம் இல்லடா. உனக்கு ஒன்னு சொல்லட்டுமா. நீ வளரும் போது உனக்கு இந்த மாதிரி ஆசை வரும்னு தெரிஞ்சுக்கிட்டு சாமி நீ குழந்தையா இருந்தப்பவே உனக்கு சிறகு கொடுக்க வந்தாரு. ஆனா உனக்கு சிறகு இருந்தா நீ என்ன செய்வ? பறந்து போயிடுவேல… அப்போ அம்மாவ விட்டுட்டு நீ போயிடுவே… அம்மா இல்லாம உன்னால இருக்க முடியுமா? அம்மாவாலையும் நீ இல்லாம இருக்க முடியாது. அதனால நா சாமி கிட்ட உனக்கு சிறகு வேண்டாம்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டேன். என்ன மன்னிச்சுடுடா செல்லம்…” சொல்லிவிட்டு விஜையை அனைத்து கொண்டார் அம்மா.

மெதுவாக தலையை நிமிர்த்தி அம்மாவை பார்த்து விஜய் சொன்னான் “எனக்கு சிறகு வேண்டாம்மா. நா உன் கூடவே இருக்கேன்”.

தன் சந்தேகம் ஒரு வழியாக தீர்ந்ததை நினைத்து சிரித்தான். இருந்தும் அவன் மனதினுள் ஒரு சின்ன கோபம், சிறகை கொடுத்து அம்மாவிடம் இருந்து பிரிக்க நினைத்த சாமியின் மேலே.

அன்பளிப்பு

2009, ஓகஸ்ட் மாதம் 21ம் தேதி எழுதியது

உனக்காய் ஒரு
கவிதை செய்தேன்
உனக்கென நான்
எனக்காய் ஒரு
கனவை செய்தேன்
எனக்கென நீ