Archive for ஜூன், 2010

நாளையும் ஒரு நான்

2010, ஜூன் மாதம் 20ம் தேதி எழுதியது

இன்றொரு பிறப்பில் நான்
இன்றே வாழ்கிறேன்
இன்று நான் பார்த்த என்னை
நாளை நான் சந்திக்க மாட்டேன்

Advertisements

தெரியாது

2010, ஜூன் மாதம் 20ம் தேதி எழுதியது

பயங்களில் எத்தனையோ விதங்கள் உண்டு. சிலருக்கு வறுமையை கண்டால் பயம், சிலருக்கு வன்முறையை கண்டு பயம், சிலருக்கு மேடை ஏறுவதில் பயம். உலகெங்கும் நூற்றுக்கணக்கான பயங்கள் (phobia) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் எல்லாவற்றிலும் ஒரு வினோதமான பயம் ஒன்று மனிதர்களை ஆள்வதுண்டு. அது ‘தெரியாது’ என்றொரு வார்த்தையின் மீதுள்ள பயம். இதில் வேடிக்கை என்னவென்றால், இப்படி ஒரு பயம் உள்ளே இருப்பது யாருக்கும் தெரிவதில்லை, தெரிந்தாலும் அதை கண்டு வருத்தப்படுவது இல்லை.

பிள்ளைகளின் ஆர்வத்தை யாராலும் கட்டுபடுத்த முடியாது. கற்றல் இல்லாமல் அவர்கள் அறிவும் மனமும் திடமான வளர்ச்சி அடைய வாய்ப்பே இல்லை. அந்த ஆர்வம் இயற்க்கை கொடுத்த ஒரு அழகான பரிசு. ஆனால் ஏனோ நாம் வளர வளர பல விஷயங்களை அறிந்து கொண்டதை போன்ற ஒரு மாயை தோன்றுவதுண்டு. அந்த மாயையில் சிக்குபவர்கள் கற்றலில் உள்ள ஆர்வத்தை தொலைத்து ஒரு கட்டத்தில் வாழ்க்கையின் பாடங்களை கூட புரிந்து கொள்ள முடியாமல் அறியாமையில் தவிக்கிறார்கள். இதில் சிக்காமல் தப்பிக்கொல்பவர்கள் மேலும் மேலும் பல புரிதல்களை கொண்டு வாழ்வை முழுமையாய் வாழ தெரிந்து கொள்கிறார்கள.

மனிதர்கள் ஏன் தனக்கு ஒரு விஷயம் தெரியாது என்று ஒப்புக்கொள்வதில் தயங்குகிறார்கள்? மற்றவர்கள் நம்மை முட்டாள் என்று நினைப்பார்கள் என்று ஒரு அச்சம் பிறப்பதால் தான். அப்படி என்றால் உலகில் உள்ள எல்லோரும் அனைத்தும் அறிந்த மாமேதைகள் தானே? இந்த கேள்வியை பார்த்தால் சிரிப்பு வருகிறதா? அப்பொழுது அந்த மெய்யில்லாத அச்சத்தை நினைத்தும் நாம் சிரிப்பது தானே சரி?

பலர் நினைப்பதை போல், கற்றலின் அவசியம் அறிவுடன் நின்று விடுவதில்லை. ஒரு புதிய விஷயத்தை கற்றும் கொள்ளும் பொழுது நம் மூளையின் ஒரு சில பகுதிகளில் ரசாயன மாற்றங்களும், மூளையின் அமைப்பும் மாற்றம் காண்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட விஷயம். மூளை பாதிப்புகள் கொண்டவர்களை கூட சரியான பயிற்சி முறைகளால் குணப்படுத்த மருத்துவத்தில் ஒரு தனி பிரிவே உண்டு.

பிள்ளைகள் எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பதற்கு அவர்களின் சுத்தமான மனம் மட்டும் காரணம் இல்லை, அவர்கள் எப்பொழுதும் எதையாவது கற்றுக்கொண்டு மனதை புதுப்பித்து கொண்டு இருப்பதும்தான். அது பெரியவர்களுக்கும் பொருந்தும். மனநலம் இருந்தால் உடல்நலமும் இலவச இணைப்பாக வந்து விடும். இப்படி கற்றல் ஒரு மனிதனை பலவிதங்களில் வளரச்செய்கிறது. இது இன்றோ நேற்றோ கண்டறிந்த உண்மையில்லை. நம் சரித்திர கதைகளில் கூட செல்வத்தில் செழித்த மனிதர்கள் யாவும் கற்ற மேதைகள் முன் தலை வணங்கி நின்றதாகவே படித்திருக்கிறோம். அது அந்த மனிதர்களை விட கற்றலுக்கு கொடுக்க பட்ட மரியாதை என்பதே உண்மை.

இவ்வளவு ஆற்றல் கொண்ட கற்றலை பார்த்து சிலர் பயப்படுவது வேடிக்கை என்பதை விட, பரிதாப பட வேண்டிய விஷயம் என்றே சொல்லலாம். கல்லாதது கடலளவு என்று படிக்கிறோமே தவிர, அதையும் நாம் கற்றுக்கொள்ள மறுக்கிறோம் என்பதே வருத்தம் தரும் உண்மை. யாரோ சிலர் நம்மை முட்டாள் என்று நினைப்பார்களே என்று பயந்து நம் வளர்ச்சியை நாமே முடக்கி போடுவது தான் உண்மையான முட்டாள்தனம்.

சரி, அச்சத்தை விட்டு விட்டோம். அப்பொழுதும் ஏதோ ஒரு சந்தேகம் எழும், நாம் எப்படி கற்றுகொள்வோம் என்று. கற்றல் என்றால், பலருக்கு ஆயிரக்கணக்கில் பக்கங்கள் கொண்ட புத்தகங்களை படிப்பது, பரீட்சை, என்று பள்ளி கல்லூரிகளில் இருந்த பயம் எல்லாம் எட்டி பார்க்கும். அது தேவை இல்லாத பயம் என்று புரிந்தாலும், “இதெல்லாம் நமக்கு வராது” என்று ஒதுங்கி கொள்பவர்கள் உண்டு. கண்டிப்பாக மனிதனால் புரிந்துகொள்ள முடியாத விஷயம் என்று இருப்பது கடவுள் ஒன்று தான். மற்றது யாவையும் சரியான வழியில் படித்து புரிந்து கொண்டால் எல்லாவற்றையும் கற்றுகொள்ளலாம்.

கண்டிப்பாக எல்லோருக்கும் சிறுவயதில் இருந்தே ஏதோ ஒரு விஷயத்தை பற்றி அனைத்தும் அறிந்து கொள்ள வேண்டும் என்று பல கனவுகள் இருந்திருக்கும். அது நாம் படித்த பள்ளி சூழலில் அதை அறிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம். இப்பொழுது அறிந்து கொள்ளலாமே.

இன்று ஒரு விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் ஒரு பெரிய மேதையிடம் தான் சென்று அதை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. இணையத்தில் தகவல்களுக்கு குறையில்லை என்பது யாவரும் அறிந்த விஷயம். இணையத்தில் அதிக நேரம் செலவழிக்க விருப்பமில்லை என்றால், எத்தனையோ நூலகங்களில் எடுத்து புரட்ட ஆளில்லாமல் ஆயிரமாயிரம் புத்தகங்கள் கண்ணீர் விட்டுகொண்டிருக்கின்றன. வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு. அதுபோலவே ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள ஆர்வம் இருந்தால் அதை பூர்த்தி செய்ய வழிகளுக்கு குறையில்லை, அதை யாரும் தடுக்கவுமில்லை.

பிறப்பு, இசை, கவிதை, மழை… இப்படி புதிதாக தோன்றும் பல விஷயங்கை நாம் அழகாகவே நினைக்கிறோம். தினமும் நம் அறிவை, மனதை, வாழ்க்கை தரத்தை புதுப்பித்து கொள்வதற்க்கு ஏன் முயற்ச்சிக்க கூடாது? புதியதாய் ஏதாவது தோன்றுமா என்று காத்து கொண்டிருக்காமல் நீங்களே அதை தேடி சென்றால் என்ன? பல விஷயங்கள் நமக்கு புரிய புரிய வாழ்க்கை மற்றும் உலகத்தின் மீதுள்ள பார்வை, நம் தன்னம்பிக்கை, சுயசிந்தனைகள், இப்படி பல விஷயங்கள் அழகாக மாறத்தொடங்குவதை நாமே உணர்வோம். அப்படி உணர்ந்து விட்டால் வாழ்க்கையில் சலிப்பிற்கு இடமே இல்லாமல் போய் விடும்.

2010, ஜூன் மாதம் 18ம் தேதி எழுதியது

நீநேன்றும் நானென்றும்
இருக்கும் உலகில்
மழை கூட பகையுனக்கு
நாம் என்று
வாழும் உலகில்
தீ கூட துனையுனக்கு

2010, ஜூன் மாதம் 4ம் தேதி எழுதியது

பிறப்போம் விதையாக
கற்ப்போம் மழலையாக
வளர்வோம் இசையாக
எழுவோம் கடலாக
விழுவோம் மழையாக
வாழ்வோம் வானாக
பிரிவோம் முகிலாக