Archive for மார்ச், 2010

சிந்திப்போமா?

2010, மார்ச் மாதம் 27ம் தேதி எழுதியது
(என் முதல் கட்டுரை 🙂 )

 சிந்தனை என்பது மனிதர்களுக்கே உரிய ஒரு வரம். புராண காலங்களில் நம் நாட்டு மனிதர்கள் எவ்வளவு சிந்தித்திருக்க கூடும்? வேதங்கள், சூத்திரங்கள்,  கலாசாரம், நாகரீகம்… எதுவும் வானத்தில் இருந்து விழவில்லை. எல்லாமே உங்களைப்போல் என்னைப்போல் மனிதர்களின் சிந்தனைகள் தான். இந்த ஆண்டில் இருந்து ஒரு 30 வருடங்கள் கடந்து சென்றாலும், மனிதர்களின் சிந்தனை திறன் அவ்வளவு வலியதாக இருந்தது. தொலைக்காட்சியும், சினிமாவும் நம் கலாச்சாரத்தை சீர் கெடுத்ததோ இல்லையோ… நிச்சயமாக நம் சிந்தனை திறனை நிறையவே சீர் கெடுத்து விட்டது.

 
சிந்தனையை பற்றி சிந்திக்கும் முன்… இன்று வாழ்க்கையின் நான்கு நிலைகளில் இருக்கும் மனிதர்களில் பெரும்பாலானோர் எப்படி எப்படி சிந்திக்கிறார்கள் என்று ஒரு சுருக்கம் –
 
1. “ஓடி விளையாடு பாப்பா” என்று சொன்ன பாரதி இன்று இருந்திருந்தால் அவருக்கு எதிராக ஒரு பொது நல வழக்கே தொடர்ந்து இருப்பார்கள். அந்த அளவுக்கு நம் சமூகத்தில் 
பிள்ளைகளை படிப்பின்… இல்லை இல்லை… மதிப்பெண்களின் பிடியில் சிக்க வைத்திருக்கிறோம். இன்னும் சில குழந்தைகள் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தள்ளப்பட்டு படும் அவஸ்தைகளை நான் விவரிக்க தேவை இல்லை. இயற்கையாகவே கருணை உணர்வுடன் பிறக்கும் குழந்தைகள் ‘போட்டி’யின் அறிமுகத்தால் சுயநலத்துடன் சிந்திக்க தொடங்குகிறார்கள். அதை விட கொடுமை… பெரியவர்களை போல் அவர்களை சிந்திக்க சொல்வது.
 
2. பிள்ளைகள் கூட அவ்வப்பொழுது புதிதாக, அழகாக ஏதாவது சிந்தித்து மனதை விரிவுப்படுத்தி கொள்வார்கள். பெரியவர்களின் சிந்தனைகள் எல்லாம் சாக்பீஸ் வட்டத்துக்குள் சிக்கிய பூச்சியை போல் தான். நமக்கு புரிந்த வட்டத்தை தாண்டி போனால் ஏதோ பெரிய விபரீதம் நேர்ந்து விடும் 
போன்ற ஓர் உணர்வு பலருக்கு உண்டு. இதில் நல்லவர் தீயவர் என்று எந்த பேதமும் இல்லை. பிறருக்காக யோசிப்பவர் கூட மற்றவர் பற்றி  தனக்கு இருக்கும் புரிதலை மையமாக வைத்தே யோசிக்கிறார்.
 
3. வாழ்க்கையில் கொஞ்சம் நடுநிலை அடையும் தருணங்களில் இருப்பவர்கள், இளமை காலத்தின் எல்லையை தொட்டு கொண்டிருப்பவர்கள் தனக்கு எல்லாம் தெரிந்ததென்று நினைத்து கொண்டு சிந்திப்பதையே ஏதோ தேவை இல்லாத வேலையை போல் நினைக்க தொடங்கி விடுகிறார்கள்.
 
4. முதியோர்களுக்கு பொதுவாக ஒரு சிந்தனை உண்டு. தன் காலத்தை போல் இந்த காலம் இல்லை என்று, புதிதாக எதையும் ஏற்க்க மறுப்பார்கள். சிலர் அதை வெளிப்படையாகவே சொல்வார்கள். அவர்களை பழிக்க வேண்டாம். அது அவர்கள் தவறில்லை. அது இயற்கையாகவே அந்த வயதிற்கு உரிய சிந்தனை  தான். நாமும் முதிர்ச்சி அடையும் போது அப்படித்தான் யோசிப்போம்.
 
இந்த நான்கு நிலைகளிலும் ஒரு பொது விஷயம் உண்டு. சிந்தனை என்றாலே அது நினைவுகளை சார்ந்தே செல்வது ஒரு போக்கு. நாம் பார்த்தது, கற்றது, கேள்விபட்டது, இப்படி பல விஷயங்கள் நம் சிந்தனைகளை ஆட்டிப்படைக்கும். எந்த சிந்தனையும் விதை ஆவதில்லை. நாமே மரம் வளர்க்காமல் ஏற்கனவே இருக்கும் மரத்தில் இருந்து பழங்களை பறித்து சாப்பிட்டு விட்டு நிம்மதியாக சென்று விடுகிறோம். மனதும் அதற்க்கு மேல் எதுவும் கேட்பதில்லை. கேட்டாலும் நாம் தருவதில்லை. கற்றல் என்றால் ஒப்பித்தல் என்று நினைத்து வளரும் தலைமுறைகளுக்கு உலகத்தின் வரலாறு தான் தெரியும். உலகிற்கு ஒரு எதிர்காலம் இருக்கிறது என்றும், அதில் தாங்கள் எப்படி ஒன்றிப்போவோம் என்றும் அவர்கள் எப்படி யோசிப்பார்கள்? நாளை என்பது தூங்கி எழ வேண்டிய ஒரு நாளாகவே போகிறது.
 
சிந்தனைகள் இந்த அளவுக்கு வீரியம் இழந்து போனதற்கு காரணங்கள் அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் பழி சொல்வது இந்த கட்டுரையின் நோக்கமில்லை. நம் ஒவ்வொருவரும் இப்பொழுது எப்படி சிந்திக்கிறோம் என்று புரிந்துகொண்டு, அதை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று வழிகள் காண வேண்டியது அவசியம்.
 
சிந்தனையை பற்றி புரிந்து கொள்ளும் முன், மனிதனுக்குள் இருக்கும் அடுக்குகளை (layers) பற்றி வேதாந்தம் நமக்கு கற்ப்பிப்பதை புரிந்து கொள்வோம். அதென்ன அடுக்குகள்? எல்லா மனிதர்களுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதை தீர்மானிப்பது இந்த மூன்று அடுக்குகளின் சதவிகித வேறுபாடு (percentage distribution).
 
1. முதலாவது, நம் உடல் – விரிவாக பார்த்தால் நாம் வாழும் பௌதீக உலகம் (physical or material world). இந்த அடுக்கை மையப்பட்டு வாழ்பவர்கள்  பணம், பொருள், புகழ் போன்ற விஷயங்களை அதிகம் விரும்புவார்கள். அவரை சுற்றி இருக்கும் உலகத்தில் நிகழும் மாற்றங்கள் அவருக்கு நிறைய பாதிப்பை ஏற்படுத்தும்
 
2. இரண்டாவது, நம் மனம் – உணர்ச்சிகள் உற்பத்தியாகும் இடம். விரிவாக இதை கனவு உலகம் (dream world) என்று சொல்லாம். பொதுவாக கனவுகளில் வாழ்பவர்களை உணர்ச்சிகள் ஆள்ந்துகொண்டிருக்கும். மன நிம்மதிக்காக சிறு சிறு விஷயங்களை விட்டுத்தர தயங்க மாட்டார்கள். 
 
3. மூன்றாவது, நம் புத்தி – நம் உடலும் மனதும் உட்கொள்ளும் விஷயங்கள் நல்லதா கெட்டதா, சரியா தவறா என்று தீர்மானிக்கும் வேலை இங்கே நடக்கிறது. இந்த அடுக்கில் வாழும் மனிதர்கள் பொதுவாக உணர்ச்சிகளின் மேல் பற்றில்லாமல் காணப்படுவார்கள். அவர் சுயனலக்காரராக இருந்தால் அவர் அறிவை வைத்து பலருக்கும் தீங்கு விளைவிக்கும் அல்லது ஏமாற்றும் திறனுடன் இருப்பார்.
 
யாரும் ஒரே அடுக்கை சார்ந்து இருப்பதில்லை. ஒன்று மேம்பட்டு இருக்கும். மற்ற இரண்டு கொஞ்சம் குறைவாக இருக்கும். எல்லாம் சமமாக இருப்பவர்கள் கூட உண்டு. இப்படி பல பிணைப்புகளில் பல வித மனிதர்களை நாம் பார்க்கிறோம்.
 
ஒரு மனிதன் நலமாக வாழ வேண்டும் என்றால், அவன் செயல்களின், எண்ணங்களின் நிர்வாகம் மேலிருந்து கீழ் வர வேண்டும். அதாவது, உடல் மற்றும் மனதை அறிவு ஆள வேண்டும். ஆனால் இன்று கீழிருந்து மேலே போகிறது நிர்வாகம். அதாவது, இந்த பௌதீக உலகில் நம் தேவைகள் மற்றும் ஆசைகள் எல்லாம் பூர்த்தியாகவே நாம் பாடுபட்டு வாழ்க்கையின் பெரிய பகுதியை தொலைத்து விடுகிறோம். நம் மனமும் அறிவும் அதை பற்றியே யோசித்து பழகுகிறது. இது மட்டும் வாழ்க்கை இல்லை என்று தெரியவரும் நேரம், வாழ்க்கை முடிந்து விடுகிறது. இரண்டாவது அடுக்கில் இருப்பவர்களும் கூட அப்படித்தான். அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும், உணர்ச்சிகளால் தன்னை தானே மிகவும் வருத்தி கொள்வார்கள். தன் மனதில் இருக்கும் கனவு உலகம் தான் முழுமையானது என்று நம்பி நிஜ உலகத்தின் உண்மைகளை தொலைத்து விடுகிறார்கள். அறிவை சார்ந்து வாழ்பவர்களுக்கு பௌதீக உலகத்தின் பிரச்சனைகளோ, உணர்ச்சிகளின் வீரியங்களோ பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. எல்லாவற்றையும் ஒரு நிகழ்வாகவே ஏற்று, அடுத்த கட்டத்தை பற்றி யோசிப்பார்கள்.
 
இதில் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. எல்லோரும் ஒரு அடுக்கில் இருந்து இன்னொரு அடுக்குக்கு பயணிக்க திறமை உடையவர்கள் தான். சந்தர்ப்பமும் சூழ்நிலையும் எதையும் கற்றுத்தரும், யாரையும் மாற்ற கூடும். இந்த மூன்றையும் கடந்து சென்று நம் அடையாளத்தை முற்றிலுமாக துறப்பது தான் மனித உயிர்களுக்கு தரப்படும் இலக்கு. இப்படி கடந்து செல்பவர்களை தான் முனிவர்கள் என்கின்றோம். ஆனால் இன்று தோன்றும் முனிவர்கள் எல்லாம் அப்படி இருக்கிறார்களா  என்பது வேறு விஷயம்.
 
இதை விவரிக்க காரணம், இந்த மூன்று அடுக்குகளை பற்றி படித்த பின்பு, சிந்தனை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். நாம் எதுவரை நம் தேவைகள் மற்றும் உணர்ச்சிகளை சார்ந்தே சுற்றிக்கொண்டு இருக்கிறோமோ, அதுவரை சுயநல சிந்தனைகளில் இருந்து நாம் தப்பவே முடியாது. சுயநலம் என்பது உங்களை பற்றி நினைப்பது மட்டும் அல்ல. எதையும் இன்னொருவர் பார்வையில் பார்க்க மறுப்பதும் சுயனலமாகும். அது நல்ல விஷயமாக இருந்தாலும் என்ன? ஒருவர் உங்களை பற்றி விமர்சனம் செய்தால் அதில் உண்மை இருக்கிறதா என்று யோசிக்காமல், நீங்கள் மிகவும் நல்லவர் என்று நினைத்து அதை புறக்கணிப்பது கூட ஒரு விதத்தில் சுயநலம் தான்.
 
சிந்தனை திறன் வலுவாக முதலில் நாம் செய்ய வேண்டிய வேலை, மூன்றாம் அடுக்குக்கு நம்மை நாமே எடுத்து செல்வது. உடலை சார்ந்து வாழ்பவர்கள் முதலில் உணர்ச்சிகளை மையபடுத்தி சிந்திக்க வேண்டும். பின்பு மனதை கட்டுப்படுத்த கற்று கொண்டு அறிவின் ஆற்றலை மேம்படுத்த வேண்டும். இது நாள் கணக்கில், மாதக்கணக்கில் நடக்கும் விஷயங்கள் இல்லை. நம் முயற்சியை பொறுத்து சில பல வருடங்கள் வரை  ஆகலாம். இந்த பயணத்தில் அவ்வளவு எளிதாக நம் பற்றுகளை விட்டு விலக இயலாது என்பதால் நமக்கு  உதவுவதற்காக அக்காலத்திலே யோகா (உடல் பற்று), பிராணயாமா மற்றும் தியானம் (மனப் பற்று) போன்ற விஷயங்களை உருவாக்கினார்கள். இன்று எல்லாம் பௌதீக உலகத்தை சமாளிக்க பயன்படுவதோடு சரி. அதற்காக நீங்கள் யோகாவும் தியானமும் பழக வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. முயற்சி என்பது முழுக்க முழுக்க உங்கள் முடிவை சார்ந்ததாக இருக்க வேண்டும். இதை விவரிக்கும் வேதாந்தம் கூட எதையும் கண்மூடித்தனமாக நம்பாமல், ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்கவே சொல்கிறது. யாரோ ஒருவர் சொல்கிறார் என்று எண்ணி செய்யும் எந்த ஒரு காரியத்திலும் உங்கள் முழு சக்தி வெளிவராது. இதை சோதித்து பார்க்க வேண்டுமென்றால், குழந்தைகளை பாருங்கள். குழந்தைகளின் சுத்தமான மனங்களில் கற்பனை திறன் மற்றும் சுய சிந்தனைக்கான அரிச்சுவடு இயற்கையாகவே வழுவாக இருப்பதால், அவர்கள் எதை செய்தாலும் முழு மனதோடு செய்வார்கள். அவர்கள் அதே மன சக்தியுடன் வளர்வார்கள். நாம் நம் கருத்தகளை திணித்து இப்படி தான் யோசிக்க வேண்டும் என்று சொல்லி பழக்காத வரை அது கலையாது. இது எதிர்காலத்தில் அவர்களுக்கு மனதளவில் நல்ல முதிர்ச்சியையும் அறிவாற்றலையும் உருவாக்கும்.
 
சரி, இப்பொழுது அறிவு கூர்மை உள்ளவராக மாறி விட்டீர்கள். இது போதுமா? இப்பொழுது உங்கள் சிந்தனைகள் எல்லாம் முழுமையாகி விடுமா? நீங்கள் இன்னும் ஒரே ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டம். இந்த கட்டத்தில் எவ்வளவோ அறிவாளிகள் தன் நிலை புரியாமல் தொலைந்து போயிருக்கிறார்கள். சிலர் வாழ்வின் மேல் வெறுப்பு வரும் அளவுக்கு கூட சென்றுவிடுவார்கள். இது, நீங்கள் எப்படி சிந்திகிறீர்கள், எவ்வளவு சிந்திகிறீர்கள் என்பதை விட, நீங்கள் எதை பற்றி சிந்திகிறீர்கள் என்று முடிவு செய்ய வேண்டிய கட்டம். இதுவும் யாரும் யாருக்கும் கற்பிக்க முடியாத விஷயம். இதில் சரியாக முடிவெடுக்க, நீங்கள் சற்று இறங்கி வந்து, உங்கள் மனதிடம் கொஞ்சம் பேச வேண்டும். இந்நிலையில் இருப்பவர்களை அறிவு ஆள்வதால், மனம் சாந்தமாகவே இருக்கும். சாந்தாமான மனதில் எப்பொழுதும் அல்பமான விஷயங்களோ, பொய்யான நினைவுகளோ தோன்றாது. அந்த நொடி, அது உங்களிடம் உண்மை பேசும். உங்கள் திறனுக்கும் குணத்திற்கும் உங்கள் அறிவை எந்த திசையில் செலுத்த வேண்டும் என்று அது சொல்லும். அது தேவையா இல்லையா என்பதை மட்டும் உங்கள் அறிவை முடிவெடுக்க விடுங்கள்.
 
இவ்வகையில் வளரும் சிந்தனைகள் எல்லை கோடுகளுக்குள் அடங்காது. ஏனென்றால் உங்களுக்கு இதுவே சரி என்று நீங்கள் முடிவு செய்த பின் அச்சங்களும் குழப்பங்களும் தானாகவே மறைந்து விடும். இப்படி ஒரு கட்டத்தில் தான் கலைஞர்கள், சேவையாளர்கள், விஞ்ஞானிகள் போன்றவர்கள் தங்களை ஏதோ ஒரு பொதுவான நலனுக்காக (greater good) அர்ப்பணிக்க தயாராகிறார்கள். விஞ்ஞானிகள் ஏன் குடும்பத்தை கூட கவனிக்காமல் மணிக்கணக்கில் ஆராய்ச்சி செய்கிறார்கள்? சேவையாளர்கள் ஏன் உடல்நலத்தை கூட கவனிக்காமல் 
சமுதாயாதிர்க்காக உழைக்கிறார்கள்? அதிக திறன் கொண்ட கலைஞர்கள் ஏன் தனித்தே படைக்க விரும்புகிறார்கள்?  அவர்கள் பொறுப்பில்லாதவர்கள் இல்லை. அவர்கள் தங்கள் சுயநல பற்றுகளை எல்லாம் கடந்து தத்தம் பாதைகளில் தங்களை அர்ப்பணித்து கொண்டவர்கள். இது உதாரணம் மட்டுமே, இதற்காக நீங்கள் பெரிய கலைஞராகவோ, செவகராகவோ இருக்க தேவையில்லை. நாம் சரியாக முடிவெடுத்தால், எதை பற்றி சிந்தித்தாலும் அது தெளிவும் வீரியமும் கொண்டதாக இருக்கும். உங்கள் சிந்தனைகள் சமுதாயத்திற்காக இருக்கட்டும், குடும்பத்திற்காக இருக்கட்டும், உங்களை நீங்களே மேம்படுத்தி கொள்வதாக கூட இருக்கட்டும். அது முக்கியம் இல்லை, சரியான இடத்தில் இருந்து உங்கள் சிந்தனை கிளம்புகிறதா என்பதே முக்கியம். இதில் உங்களுக்கு சில கனவுகள் தோன்ற கூடும். அதை விட்டு விடாமல் பின் தொடருங்கள். அந்த கனவுகள் ஆகாய கோட்டைகள் இல்லை. அது உங்கள் எதிர்காலத்தை சொல்லும் கனவுகள். அதை மனதில் கொண்டு முயற்ச்சித்தால் நீங்கள் என்றும் கலைத்து போகமாட்டீர்கள். ஏனென்றால், அது யாரும் போதிததில்லை, யாரும் கர்ப்பித்ததில்லை. அது உங்கள் கனவு, உங்கள் எதிர்காலம். அதில் உங்கள் உடல் மனம் அறிவு அனைத்துமே ஒன்றி போய் இருக்கும்.
 
வெறும் சிந்தனை தானே, அதனால் என்ன பலன் என்று நீங்கள் யோசித்தால்… உங்கள் சிந்தனை திறனை தட்டி எழுப்புவதால் உங்களுக்கு மட்டும் நலன் இல்லை. உங்கள் குடும்பம், நண்பர்கள், சமுதாயம், இப்படி உங்களை சார்ந்தவர்கள் எல்லோருக்கும் அந்த சிந்தனைகளின் சக்தியில் ஒரு துளியாவது போய் சேரும். சிந்தனை மனிதனின் தலையெழுத்தையே மாற்றும் சக்தி கொண்டது. அதனால்தான் எல்லா மதங்களிலும் நல்ல சிந்தனைகளை போற்றுகிறார்கள், போதிக்கிறார்கள். நீங்கள் எப்பொழுது முழு திறனுடன் சிந்தித்து செயல்படுகிரீர்களோ, அப்பொழுதே முழு மனிதராக தகுதி கொள்கிறீர்கள். இப்படி எல்லோரும் பற்றில்லாத சிந்தனைகளுக்கு மதிப்பு கொடுக்க ஆரம்பித்தால், உலகின் பல பிர்ச்சனைகள் தீர்ந்து விடும். எல்லோரும் வலுவாக சிந்திக்கும் உலகத்தில்  கொலை, கொள்ளை, சண்டைகள், போர்கள்… இதெல்லாம் எங்கிருந்து தோன்றும்? அதையும் கொஞ்சம் சிந்திப்போம்…

மன(ல்) வீடுகள்

2010, மார்ச் மாதம் 26ம் தேதி எழுதியது
நான் செய்த
மணல் வீடுகள்
கரைந்திருந்தால்
தடுத்திருக்கலாம்
கலைந்திருந்தால்
பிடித்திருக்கலாம்
சிதைந்திருந்தால் கூட
மீண்டும் செய்திருக்கலாம்
சொல்லாமலே
மறைந்து போனதே
அதை எதுவென்று
புரிவது நெஞ்சே

இசை

2010, மார்ச் மாதம் 25ம் தேதி எழுதியது
மனதை வருடி
தாலாட்டும்
தாயும் நீயே

எழுந்து நிமிர
தோள் கொடுக்கும்
தோழனும் நீயே
 
வாகன ஓசைகளுடன்
பொழுதின் ஒலிகளுடன்
நீ காணும் போராட்டங்கள்
அறியாமல் போவேனோ
 
என் செவி சொல்லாமலே
உன்னிடம் விடை காண
நீ காணும் ஏக்கங்கள்
புரியாமல் போவேனோ
 
மண்ணை கண்டால்
ஏனோ நினைவுகளை
எரிக்க வைக்கிறாய்
 
விண்ணை கண்டால்
என்னையும் உன்னுடன்
பறக்க வைக்கிறாய்
 
பிரியாதே என் உயிரை
மீண்டும் மீண்டும் நீயே
பிறக்க வைக்கிறாய்

ஞானம்

2010, மார்ச் மாதம் 24ம் தேதி எழுதியது
தோல்வியில்
ஞானம் காண்பவன்
மறு முறை அழுவதில்லை
வெற்றியிலும்
ஞானம் காண்பவனுக்கு
தோல்வியென்று எதுவுமில்லை

ஏமாற்றம் – VIII

2010, மார்ச் மாதம் 23ம் தேதி எழுதியது
அக்கனவிலே இரு
விழி வீழ்ந்ததா
அதில் விழாமலே ஒரு
வலி வந்ததா

உயிரில் வெளிச்சம் – IX

2010, மார்ச் மாதம் 21ம் தேதி எழுதியது
விழிக்காமல்
விழித்திருப்பாயோ 
விழியே
உன் வழி பாராமல்
என்னை பார்க்கிறேன் 
என் உயிர் வழியே

உயிரில் வெளிச்சம் – VIII

2010, மார்ச் மாதம் 20ம் தேதி எழுதியது
இருளிலும்
ஒளியே என் மேல்
விழுகிறது
குழந்தையாக கொஞ்சம்
உறங்கி போக நெஞ்சம்
ஏங்கும் இப்பொழுது
கண்ணீரே நீ கூட
எனக்கு துணையில்லையா
உயிர் வலித்து வளர்ந்த போதும்
நீ வரவில்லையா

அறிதல்

2010, மார்ச் மாதம் 20ம் தேதி எழுதியது
நண்பர்கள்
சிரிக்க வைத்து
சொல்கிறார்கள்
நான் யாரென்று
 
தாயும்
நினைக்க வைத்து
சொல்கிறார்
நான் யாரென்று
 
கடவுள் மட்டும்
என்னை அழவைத்தே
சொல்கிறார்
நான் யாரென்று

பட்டம்

2010, மார்ச் மாதம் 15ம் தேதி எழுதியது
பூமரத்தில் உறங்கும்
பட்டம் போல் நானும்
பறக்கத்தான் நினைக்கிறேன்
சிறகுகள் இல்லையே
உறக்கத்தில் பறக்கவும்
கனவுகள் இல்லையே
எதை கண்டு
என்னை தொலைத்தானோ
என்னை செய்த இறைவன்

விடியல்

2010, மார்ச் மாதம் 9ம் தேதி எழுதியது
விடியலையும் நினைத்து
கொஞ்சம் அஞ்சினேன்
அதுவும்
பொய்யாகி விடும் என்றே
மனதில் வர மறுத்த
சூரியனுக்கு
விடியலே நீ ஏன்
பழி சுமந்தாயோ