Archive for திசெம்பர், 2009

பாதங்கள் படாத பாதை

2009, திசெம்பர் மாதம் 30ம் தேதி எழுதியது

எத்தனை சுகங்கள்
எத்தனை வரங்கள்
கொஞ்சம் கற்கள் தூவும்
சர்க்கரை கணங்கள்

எழுவோருக்கும் அழகுண்டு
விழுவோருக்கும் மதிப்புண்டு
எல்லோருக்கும் நிறைவுண்டு
தொலைந்தாலும் இங்கே வழியுண்டு

பரிசாக வரும் பாலைவனம்
ஏற்றுக்கொண்டால்
வாழ்வை நிரப்பும்
பூங்காவனம்

அழகாய் தொடரும்
பாதை ஒன்று
அதன் தொடக்கத்தில் சில
முட்கள் உண்டு

மனிதனாய் பிறப்பது
ஆசி ஆகும்
அந்த ஆசியிலே இது
அதிர்ஷ்ட்டம் ஆகும்

அன்பு உன்னில் வளர்ந்தால்
நாளை மண்ணில் பரவும்
இதை மெய்யென்று தானே
உணரவில்லை எவரும்

இறைவனின் பாவம்

2009, திசெம்பர் மாதம் 30ம் தேதி எழுதியது

பொய்கள் நிறைந்த உலகில்
சில பொய்கள் கேட்டு
கிட்டாமல் போனால் அதுவும்

கொஞ்சம் மெய்யின் சாயல்
தன்னை தேடி வர கண்டு
குப்பையில் வீசுவார் அதுவும்

தன்னை விட்டு கொடுத்து
ஒரு நொடி வாழ்வதே
பிழையே என்பார் அதுவும்

தன்னில் ஒரு கரையுண்டு
அதை மறந்து விட்டு
உலகையே பழிப்பார் அதுவும்

எப்படி இருந்தால் என்ன
புண்ணியம் அவர்
உரிமை என்றே கேட்டு
கரைகளை கழுவி விடுகிறார்
பிரார்த்தனை முடிந்தது
இப்பொழுது
எல்லாம் இறைவனின் பாவம்

மின்னல் நட்பு

2009, திசெம்பர் மாதம் 27ம் தேதி எழுதியது

ரயிலுக்கு காத்திருந்த நேரம்
புத்தகத்தில்
ஆழ்ந்து போன பெண்மணி
தொலைபேசியில்
பரபரப்பாய் பேசிய ஒருவர்
வேடிக்கை பார்த்து
நேரம் களித்த சிறுவன்
சற்று அருகில்
பழக்கூடை சுமந்து வந்த பாட்டி
கொஞ்சம் தடுமாறவே
பதறி போனது நெஞ்சங்கள்
பின்பு ஒன்றுமில்லை என்று
தெரிந்த பின்னே
ஒருவரை ஒருவர்
சில நொடிகள் பார்த்து விட்டு
மீண்டும் தன்
வேலையை தொடர்கிறார்கள்
உருவான நேரத்திலே
முறிகிறது
மின்னல் நட்பு

காற்றின் சுவடுகள்

2009, திசெம்பர் மாதம் 25ம் தேதி எழுதியது

காற்றாகவே
வாழ நினைத்த பின்
சுவடுகள் எல்லாம்
பொய்யின் வடிவங்கள் தானே

என் ஸ்பரிசங்கள் எங்கும்
உணரவில்லை என்று
கல்லாக நான்
மாரிப்போவேனோ

என் ஓசைகள் எங்கும்
செவிக்கவில்லை என்று
புயலாக நான்
வீசிப்போவேனோ

காற்றாகவே நான்
வாழ பிறந்ததால்
காற்றோடு என்
வாழ்வை கலக்கிறேன்

உயிரில் வெளிச்சம் – IV

2009, திசெம்பர் மாதம் 24ம் தேதி எழுதியது

தொடங்கும் முன்பே
முடிந்து விடும்
பல பயணங்கள் உண்டு
அந்த முடிவில் இருந்து
தொடங்கும்
சில பயணங்கள் உண்டு

விழிகளில் பல
தூரங்கள் விரிந்தாலும்
சில உறக்கங்கள் உண்டு
நினைவுகள் எட்டி பார்க்கும்
அந்த உறக்கத்தில்
சில துளிகளும் உண்டு

யாரோ விரித்த பாதையில்
தனக்காக நடப்பவர் எல்லாம்
புத்திசாலி ஆவதா
நான் விரித்த பாதையில்
பிறருக்காக நடப்பதால்
நான் மட்டும் பாவி ஆவதா

ஆயிரம் முறை விழுந்தாலும்
வலிகளை வாங்கத்தான்
கற்றதிந்த நெஞ்சம்
உயிர் வரை வலித்தாலும்
திருப்பி கொடுக்கத்தான்
கற்றதில்லை என்றும்

சிறகுகள் விரித்ததால்
தவறானது
ஒரு இறகில் காயம்
இறகை துறந்து விட்டு
மீண்டும் சிறகை
விரிக்கிறேன் நானும்

நினைவுகள் என்னை
சூழ்ந்தது போதும்
நான் கண்கள் மூடுகிறேன்
அதில் கனவுகள் என்று
இனி ஏதும் இல்லை
என் உயிரை திறக்கிறேன்

சிரித்து போகவும்
ரசித்து போகவும்
வாழ்வில் வரம் என்னவோ
அதை எண்ணிப்பார்க்கத்தான்
தோன்றவில்லை
இந்த வாழ்வே வரமல்லவோ

உயிரில் வெளிச்சம்
பரவிய பின்னே
இருளென்று ஒன்றும் இல்லை
மூச்சுக்காற்று
தணியும் வரை
முற்றுபுள்ளி ஏதும் இல்லை

அதிர்ஷ்ட்டம்

2009, திசெம்பர் மாதம் 20ம் தேதி எழுதியது

அதிர்ஷ்ட்டம் என்பது காற்றில்லை
வந்து வந்து போவதற்கு
அது உனக்குள் புதைந்த விதை
நம்பிக்கை எனும்
நீரை ஊற்றினால்
அது வளர்ந்து நின்று
உன்னை வணங்கும்

உயிரில் வெளிச்சம் – III

2009, திசெம்பர் மாதம் 19ம் தேதி எழுதியது

கனவுகள் என்னுள்
கரைந்து போக
கடவுளின் கனவில்
நானும் கரைகிறேன்

கேள்விகள் எல்லாம்
மெல்லமாய் மறைய
விடைகளின் விடியல்
என் உயிரின் உள்ளே

நகர்ந்து போ வானமே
உன்னை தொட்டு விடுவேன்
நின்று விடு மழையே
உன்னை நனைத்து விடுவேன்

தீர்ந்து விடு கண்ணீரே
வாழ்வில் ஒரு குறையில்லை
ஓய்ந்து விடு மனமே
உயிரில் இனி பிழையில்லை

பாதை – IV

2009, திசெம்பர் மாதம் 19ம் தேதி எழுதியது

நீ செல்லும்
பாதை எங்கும்
பூக்கள் மலர்ந்து விடாது
மலராத பூக்களை
நீயே விதைத்து செல்
அது என்றும் வாடிவிடாது

உயிரில் வெளிச்சம் – II

2009, திசெம்பர் மாதம் 13ம் தேதி எழுதியது

கேட்கிறது கேட்கிறது
அந்த நிலவில் ஒரு பாடல்
இந்த இரவின் சப்தம் ஓயுமா
நானும் நிலவுடன் பாட வேண்டும்

சிரிக்கிறது சிரிக்கிறது
மரங்கள் எல்லாம் எனை நோக்கி
இந்த காலடி சப்தங்கள் ஓயுமா
நானும் மரங்களுடன் சிரிக்க வேண்டும்

அழைக்கிறது அழைக்கிறது
வானம் என் பேர் சொல்லி
இந்த காற்று கொஞ்சம் ஓயுமா
நானும் வானை அழைக்க வேண்டும்

சொல்கிறது சொல்கிறது
உயிரும் எனக்குள் ஏதோ
இந்த மனமும் கொஞ்சம் ஓயுமா
நானும் உயிருடன் பேச வேண்டும்

காலம் அழித்த குழந்தைகள்

2009, திசெம்பர் மாதம் 13ம் தேதி எழுதியது

வெளியே சாரல் அடிக்க
அலுவுலகத்தில் ஜன்னலை
திரும்பி பார்க்காமல்
அவசரமாய் ஓடுகிறான்
பணம் அழித்த குழந்தை

வாடிக்கையாளன் பொருளை பெற்று
கடைக்காரனுக்கு நன்றி சொல்ல
முகத்தை கூட பார்க்காமல்
அடுத்த பொருளை தேடுகிறான்
உழைப்பு அழித்த குழந்தை

பிடித்த பாடல் தொலைகாட்சியில்
இரு வரிகள் கேட்கும் முன்பே
பிள்ளைகள் வீடு திரும்ப
சமயலறைக்கு ஓடுகிறாள்
பொறுப்பு அழித்த குழந்தை

நண்பன் தன்னிடம்
ஏதோ அறிவுரை சொல்ல
காதில் வாங்காமல்
தலையை அசைக்கிறான்
அனுபவம் அழித்த குழந்தை

அழிந்து போன குழந்தைகளின்
செய்கைகளை பார்த்து கொண்டே
தெரிந்து தான் அந்த
வெகுளி சிரிப்பை சிந்துகிறதோ
இதுவரை அழியாத குழந்தைகள்