Archive for செப்ரெம்பர், 2009

கற்பனை கிறுக்கல்

2009, செப்ரெம்பர் மாதம் 29ம் தேதி எழுதியது

சிறிய சூரியன் ஒன்று
சிறியதோர் வானத்தில் உதித்து
சிறிய நதி ஓடும் அதில்
சிறிதாய் படகொன்று செல்லும்
உயிரே இல்லாத அந்த மரங்களும்
யாரும் இல்லாத கூரை வீடுகளும்
வரைந்து ரசிக்கவே பிடித்தது
பிடித்ததால் என்ன
அன்று நான் வரைந்த காகிதம்
யாரும் காணாத கண்ணாடி தானே
மெய் சொல்ல நினைத்த
வண்ணங்களும் பிம்பங்கள் தானே

Advertisements

கண்ணீர் துறவி

2009, செப்ரெம்பர் மாதம் 26ம் தேதி எழுதியது

கண்ணீரால்
நான் துறப்பது
உயிரையும்
இழுத்து செல்வதேனோ

சிறகுடைந்த நெஞ்சம்

2009, செப்ரெம்பர் மாதம் 26ம் தேதி எழுதியது

ஓடினேன் சிறு தூரம்
உன் நிழலினை விட்டு
கனவும் கானலாய் போகவே
உயிர் கலைத்து உன் முன்
கையேந்தி நிற்கிறேன் இறைவா
மீண்டும் உன் கருவறையில் தூங்கவே

தனிமை

2009, செப்ரெம்பர் மாதம் 25ம் தேதி எழுதியது

நிலவில் நீரை
கண்டு விட்டார்களாம்
என்னில் தான் இன்னும்
நிலவை காணவில்லை

பயணம்

2009, செப்ரெம்பர் மாதம் 25ம் தேதி எழுதியது

அச்சத்தால் என்றும்
ஓய்ந்து விடாதே
தாண்டி செல்லும் முன்
பெருங்கடலானது
நாளை நினைவில்
சிறு துளியாகுமே
விழுந்தாலும் என்ன
அது மருந்தாகுமே

மண் துகள்

2009, செப்ரெம்பர் மாதம் 20ம் தேதி எழுதியது

மண் துகளாய்
நான் வாழ்ந்தேன்
கடற்கரையில்
கடவுள் ஒரு நாள்
கல் எறிந்தார்
வலியென்று நான் அழுதேன்
வலியின் அர்த்தம் புரிந்தது
கடல் வந்து ஓய்ந்த பின்னே
கறையாமல் நான் கரையிலே

புரியாத பாடங்கள்

2009, செப்ரெம்பர் மாதம் 20ம் தேதி எழுதியது

சரியென்று நினைத்ததோ
தவறாகி என்னை வதைத்தது
தவறென்று அஞ்சியதோ
சரியென்று நிறம் கொண்டது
இன்னும் புரியவில்லை
நாளுக்கொரு பாடம் சொல்லும்
இறைவனின் நீதிகள்

நியாயம்

2009, செப்ரெம்பர் மாதம் 20ம் தேதி எழுதியது

பாலைவனத்தில்
நான் நட்ட பூச்செடி
வாடி போனால்
யாரை தேடிச்சென்று
நான் நியாயம் சொல்ல

அம்மாவின் தோழிகள்

2009, செப்ரெம்பர் மாதம் 19ம் தேதி எழுதியது

நண்பர்களை பள்ளியில் இருந்து
அழைத்து வந்து
அறிமுகம் செய்த போதும் அம்மா
சொன்னதில்லை அவர்கள் பெயரை

பண்டிகை தினங்களில்
உறவுகளின் வாழ்த்து
குவிந்த போதும்
கேட்டதில்லை அவர்களின் குரலை

அப்பாவின் நண்பர்கள் வீடு வந்து
எத்தனை விடுமுறைகள்
இனிப்புகளும் பரிசுகளும் பெற்றபோதும்
கண்டதில்லை அவர்களை என்றும்

ஒரு வேலை அவர்களும் அம்மாவை போல்
இல்லத்தின் உலகத்தில் கலந்து
அவர்களின் பிள்ளைகளும்
என்னை போல் நினைத்திருப்பார்களோ
அம்மாவின் தோழிகளை பற்றி

உணர்தல்

2009, செப்ரெம்பர் மாதம் 17ம் தேதி எழுதியது

என்னை தேடி செல்லும் வழியில்
என் மனம் அறிந்து
நானே வியக்கிறேன்
அந்த வியப்பால் நான் வளர்கிறேன்