Archive for ஓகஸ்ட், 2009

சிரமத்திற்கு வருந்துகிறோம்

2009, ஓகஸ்ட் மாதம் 31ம் தேதி எழுதியது

சாலையோரம்
வேலையென்று
வருந்துகிறார்கள்
ஒரு வருடமாக

Advertisements

சிறகு

2009, ஓகஸ்ட் மாதம் 29ம் தேதி எழுதியது

ஆறு வயதே நிறைந்து இருந்த விஜய்யின் சின்ன கண்களில் ஒரு பெரிய சந்தேகத்தின் நிழல் மெதுவாக விரிந்தது. வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு வானத்தை பார்த்தபடியே ஏதோ யோசித்து கொண்டிருந்தான்.

வலதுபுறம் யாரோ நடந்து வரும் சப்தம் கேட்க, திரும்பி பார்த்தான்.

அண்ணன்!

“அண்ணா! எனக்கு ஒரு சந்தேகம்…”

“ம்ம்…”

“நா பறக்கணும்னு நினைக்கிறன். எனக்கு சிறகு வளருமான்னா?”

“லூசு மாதிரி பேசாதே… போய் வேற ஏதாவது செய்”

அண்ணன் ஏன் இப்படி சொல்கிறான் என்று விஜய்க்கு புரியவில்லை. அவன் சந்தேகமும் தீரவில்லை.

ஒரு வேலை அண்ணனுக்கும் பதில் தெரியவில்லையோ? வேறு யாருக்கு தெரியும் என்று நினைத்து கொண்டு இருக்கும்போதே அந்த வழியாக நடந்து வந்தார் அவன் பள்ளி வாத்தியார். அவரை பார்த்ததும் விஜய்யின் முகம் மலர்ந்தது. பையன் தன்னிடம் ஏதோ சொல்ல வருகிறான் என்பதை உணர்ந்த வாத்தியார் தன் நடையை நிறுத்தி கொண்டு அவனை பார்த்தார்.

“அய்யா! எனக்கு ஒரு சந்தேகம்! தீர்த்து வெய்ப்பீங்களா?”

“சொல்லுப்பா…” பிள்ளையின் ஆர்வத்தை நினைத்து மகிழ்ச்சியுடன் பதில் சொல்ல தயாரானார்.

“அய்யா… நா வானத்துல பறவை பார்த்தேன். அது மாதிரி எனக்கு பறக்கணும்னு ஆசை. எனக்கு சிறகு வளருமா?”

விஜய்யிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்ப்பார்க்காத வாத்தியார் சில நொடிகள் யோசித்து விட்டு சொன்னார்.

“வானத்துல பறக்கிற பறவையெல்லாம் பறந்தா தான் அது இந்த உலகத்துல பிழைக்க முடியும். அதனால அதுக்கு சிறகு தேவை. உனக்கு அது தேவையில்லை”. இதை சொன்ன பிறகு விஜய்யிடம் இருந்து பதில் இல்லை. பையனின் சந்தேகத்தை தீர்த்து விட்டோம் என்று நினைத்து ஒரு சிறிய கர்வத்துடன் வாத்தியார் அங்கிருந்து விடைபெற்றார்.

வாத்தியார் சென்ற பிறகும் விஜய் யோசனையில் இருந்தான். அவர் சொன்னது ஏதோ கொஞ்சம் புரிந்தது போல் உணர்ந்தான். அனால் அவன் சந்தேகம் மட்டும் தீர்ந்தபாடில்லை.

வெளியே இருள் வர துவங்கியது. இன்னும் கொஞ்ச நேரம் வாசலில் நின்று கொண்டிருந்தால் வீட்டில் திட்டுவார்கள் என்று பயந்த விஜய், உள்ளே ஓடினான்.

தொலைக்காட்சியின் சப்தம் கேட்டு அதன் பக்கம் சென்ற அவன், அப்பா அதை உற்று பார்த்து கொண்டிருப்பதை கவனித்தான். அப்பாவை பார்த்தவனுக்கு ஒரு யோசனை. அவரை கேட்டால் என்ன?

“அப்பா! எனக்கு ஒரு சந்தேகம்…” குழப்பத்துடன் சொன்னான்

“என்ன…” திரையிலிருந்து பார்வையை நகர்த்தாமல் அப்பா கேட்டார்.

“எனக்கு பறவை மாதிரி பறக்கணும்னு ஆசைப்பா. எனக்கு சிறகு வளருமா?”

“அதெல்லாம் நடக்காது… உள்ள போ… ஹோம்வர்க் முடிச்சியா?”

“முடிச்சுட்டேன்ப்பா” வருத்தத்துடன் பதில் சொன்னான் விஜய்

அப்பா எதுவும் நடக்காது என்று சொன்னதை நினைத்து மனம் உடைந்து போனான். அவனால் அதை ஏற்க்க முடியவில்லை. ஒரு வேலை அப்பா அவன் தொல்லை செய்கிறான் என்று நினைத்து அவனை விரட்ட அப்படி சொன்னாரோ?

திடீரென்று அவனுக்கு ஒன்று தோன்றியது. அம்மாவிடம் கேட்கவேயில்லையே! நிச்சயமாக அம்மாவுக்கு பதில் தெரிந்திருக்கும் என்று முடிவு செய்தவன் அம்மாவை தேடி ஓடினான்.

“அம்மா…”

“என்னடா?”

“அம்மா எனக்கு ஒரு சந்தேகம்”

“என்ன கண்ணா சந்தேகம்? சொல்லு”

அம்மா அவன் தலையை வருடிய படியே கேட்க, கொஞ்சம் தைரியத்துடனே கேட்டான்…

“அம்மா! இனிக்கு நா வானத்துல பறவை பார்த்தேன். அத பார்த்துட்டு எனக்கும் பறக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கும்மா. எனக்கு சிறகு வளருமா? யாரும் செரியா பதில் சொல்ல மாட்டேன்கிறாங்க. அப்பா அது நடக்காதுன்னு சொல்றாரும்மா.”

சிறிது நேரம் விஜையை வேடிக்கையுடனும் பிரியத்துடனும் பார்த்து விட்டு அம்மா சொன்னார் “அப்படி எல்லாம் இல்லடா. உனக்கு ஒன்னு சொல்லட்டுமா. நீ வளரும் போது உனக்கு இந்த மாதிரி ஆசை வரும்னு தெரிஞ்சுக்கிட்டு சாமி நீ குழந்தையா இருந்தப்பவே உனக்கு சிறகு கொடுக்க வந்தாரு. ஆனா உனக்கு சிறகு இருந்தா நீ என்ன செய்வ? பறந்து போயிடுவேல… அப்போ அம்மாவ விட்டுட்டு நீ போயிடுவே… அம்மா இல்லாம உன்னால இருக்க முடியுமா? அம்மாவாலையும் நீ இல்லாம இருக்க முடியாது. அதனால நா சாமி கிட்ட உனக்கு சிறகு வேண்டாம்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டேன். என்ன மன்னிச்சுடுடா செல்லம்…” சொல்லிவிட்டு விஜையை அனைத்து கொண்டார் அம்மா.

மெதுவாக தலையை நிமிர்த்தி அம்மாவை பார்த்து விஜய் சொன்னான் “எனக்கு சிறகு வேண்டாம்மா. நா உன் கூடவே இருக்கேன்”.

தன் சந்தேகம் ஒரு வழியாக தீர்ந்ததை நினைத்து சிரித்தான். இருந்தும் அவன் மனதினுள் ஒரு சின்ன கோபம், சிறகை கொடுத்து அம்மாவிடம் இருந்து பிரிக்க நினைத்த சாமியின் மேலே.

வாடிக்கையாளன்

2009, ஓகஸ்ட் மாதம் 29ம் தேதி எழுதியது

செருப்பு தைப்பவன்
செயற்கை நிழலில் அமர்ந்து
வேலை செய்கிறான்
கால்களில் செருப்பில்லாமல்
வெயிலில்
காத்திருக்கிறான்
வாடிக்கையாளன்

தனிமை – V

2009, ஓகஸ்ட் மாதம் 26ம் தேதி எழுதியது

பூக்கள் இல்லாத
பாலைவனத்தை
விதியென்று
சொல்லி விடலாம்
நிறமே இல்லாத
பூவணத்தை
என்னவென்று
சொல்லி அழுவது

தொற்று நோய்

2009, ஓகஸ்ட் மாதம் 24ம் தேதி எழுதியது

எத்தனை நாள்
பசி கொண்டால்
மரணம் வரும் என்று
மருத்துவரிடம்
கேட்டீர்களா

எந்த சேரிகளில்
முகமூடி அணிந்து
செல்ல வேண்டும் என்று
நண்பர்களிடம்
பேசினீர்களா

எங்கள் குடுசைகளில்
போதிய உணவு
எப்பொழுது வேகும் என்று
ஊடகங்களில்
விவாதித்தார்களா

எங்கள் விதிக்கு
யார் யாரை
பழி சொன்னார் என்று
நாங்கள் அறியவில்லை
நீங்கள் அறிந்தீர்களா

சந்தேகம் தான்
இதெல்லாம்
நடக்குமா என்று
ஏனென்றால்
எங்கள் வறுமை
தொற்று நோய் இல்லையே

அன்பளிப்பு

2009, ஓகஸ்ட் மாதம் 21ம் தேதி எழுதியது

உனக்காய் ஒரு
கவிதை செய்தேன்
உனக்கென நான்
எனக்காய் ஒரு
கனவை செய்தேன்
எனக்கென நீ

மௌனம் – III

2009, ஓகஸ்ட் மாதம் 21ம் தேதி எழுதியது

மழலை பேச்சின்
மொழி மாற்றமோ

மழை முனுமுனுக்கும்
பாடல் வரிகளோ

யாரும் கேட்காத
கல்லறை கவிதைகளோ

கடல் அலைகளின்
பேச்சு பரிமாற்றமோ

இன்னும் எத்தனை விதங்களில்
புரியாத புதிராக
நான் புரிந்துகொள்வது
நீயே சொல்லாத வரை
உன் மௌனத்தின் அர்த்தங்களை

சொல்லாமல் விட்ட பாடம்

2009, ஓகஸ்ட் மாதம் 21ம் தேதி எழுதியது

முகம்
தோற்றம்
உடை
பேச்சு
கண்களை உறுத்தாமல்
கேட்பவர்களுக்கு மட்டுமே
எனும் நிபந்தனையை ஏன்
கற்பிப்பதில்லை
உதவுங்கள் என்று
சொல்லும் இந்த சமுதாயம்

2009, ஓகஸ்ட் மாதம் 15ம் தேதி எழுதியது

உனக்கே நீ என
இறைவன் எழுதி இருந்தால்
ஏதோ ஒரு முகத்தில்
மலரும் புன்னகை
உனதாக மாறிப்போகாது

பிம்பம் தாருங்கள்

2009, ஓகஸ்ட் மாதம் 9ம் தேதி எழுதியது

நிலவே உயரம் ஆனதே
கொஞ்சம் நீர் ஊற்றுங்கள்
மண்ணில் அது பதியுமே
கண்டு செல்கிறேன்

பூவில் முட்கள் உள்ளதே
ஒரு சித்திரம் செய்யுகள்
நிறம் மட்டும் உணருமே
தடவி செல்கிறேன்

தூரங்கள் பாரம் ஆனதே
சில ஞாபகம் தாருங்கள்
நினைவு மட்டும் போதுமே
ரசித்து செல்கிறேன்

கண்ணீர் மனதை வதைக்குமே
சில பொய்கள் தாருங்கள்
வார்த்தை மட்டும் போதுமே
கேட்டு செல்கிறேன்