Archive for மே, 2009

செய்திகள் – I

2009, மே மாதம் 27ம் தேதி எழுதியது

ஒரு வார்த்தை இடித்து
சில கனவுகள் பலி…

வாங்கியதை
திருப்பி தராததால்
அன்பு சுட்டு கொலை…

எதிர்பார்ப்பை நாடியதால்
நட்பு தப்பி ஓட்டம்…

வெற்றி பெற
சில குழப்பங்களே தேவையான
கண்ணீர் துளிகள்…

புயல் காற்று வீசும் என
தன் நிலை ஆராய்ச்சி அறிவிப்பு…

வணக்கம்!
செய்திகள் வாசிப்பது
மனசாட்சி

நட்பு – II

2009, மே மாதம் 27ம் தேதி எழுதியது

முகம் அறியாமல்
பாசம் கலக்கும்
தாயின் சுவாசத்தில்
தொடங்குகிறது
நட்பின் வாசம்

திருட்டு

2009, மே மாதம் 25ம் தேதி எழுதியது

என்னிடம் திருடிய
மழை துளிகள்
பூவின் முகத்தில்
ஓய்வெடுக்கும்

என்னிடம் திருடிய
பல நொடிகள்
பிள்ளை கையில்
விளையாடும்

என்னிடம் திருடிய
சிறு சிரிப்பு
முதிர்ந்த முகத்தில்
முத்தாகும்

என்னிடம் திருடிய
பல வார்த்தைகள்
மௌன மனதில்
முள்ளாகும்

என்னிடம் திருடிய
சில மௌனங்கள்
நகரும் நொடிகளில்
பிழையாகும்

திருடிய காலம்
நிரபராதியாய்
களவு விட்ட நான்
குற்றவாளியாய்

2009, மே மாதம் 25ம் தேதி எழுதியது

நிகழ்ந்ததை நினைத்து
வருத்தத்தை விட
நிகழப்போவதை நினைத்தே
மனம் வலி கொள்கிறது
அவர்கள் தமிழர்களென்று
தலைவர்கள் கூவுகிறார்கள்
அவர்கள் மனிதர்களென்று
யார் வாடுகிறார்

அதிர்ஷ்ட்டம் – I

2009, மே மாதம் 25ம் தேதி எழுதியது

அதிர்ஷ்ட்டமில்லை என்று
வருந்துபவர் என்றும்
அதிர்ஷ்ட்டத்தை நம்பி
வாழ்வதில்லை
முயற்சி ஒன்றே
முதல் செய்வதால்தான்
தோல்வி அவர்களை
உடைக்கிறது

மழலை தூது

2009, மே மாதம் 24ம் தேதி எழுதியது

என் 100வது கவிதையை போலவே என் 200வது கவிதையும் என் மனம் பறித்த குட்டி கவிதை(ரீமா)க்கு சமர்ப்பணம் 🙂 (தலைப்பை சொன்ன ரீமாவின் விசிறியான ஜனாவுக்கு நன்றி…)

புகைப்படம் மட்டும் பார்த்தாலும்
உன் சிரிப்பின் தூய்மை
மறையவில்லை

ஒலியாய் மட்டும் வந்தாலும்
உன் குரலின் இனிமை
குறையவில்லை

தூதாய் மட்டும் கேட்டாலும்
உன் செய்கை இன்றும்
அலுக்கவில்லை

நாட்கள் உன்னை வளர்த்தாலும்
உன் நினைவுகள் உன்னை
வளர்க்கவில்லை

மனக்கோரிக்கை

2009, மே மாதம் 24ம் தேதி எழுதியது

மெய்யான ஒன்றை
முழுதாய் ஏற்க்கும்
மனம் வேண்டும்

பொய்யான வாழ்த்தை
பழியாக மறுக்கும்
குணம் வேண்டும்

இமை சரிந்தாலும்
கண்களில் மறையாத
நிறை வேண்டும்

நேசம் கொண்டால்
மனச்சுவர் உடையும்
குறை வேண்டும்

கேட்டதெல்லாம்
கணவாய் போனால்
திருப்தி வேண்டும்

கேட்காததெல்லாம்
நிகழ்ந்தே போனால்
தெளிவு வேண்டும்

காட்சியெல்லாம்
என்னுள் தெளிய
வெளிச்சம் வேண்டும்

கண்டதும் காணாததும்
ஒன்றாகி போக
இருளும் வேண்டும்

நேற்றின் சாயம் அழிந்து
இன்றாகவே வாழும்
இந்நாள் வேண்டும்

மனதின் காயம் அழிந்து
நானாகவே வாழும்
இந்நொடி வேண்டும்

வெற்றி

2009, மே மாதம் 24ம் தேதி எழுதியது

ஜாதி இல்லை
மதம் இல்லை
செல்வம் கூட
பேதம் இல்லை
முயற்சி மட்டும்
வெற்றி தரும்
தேர்வு முடிவுகள்

நிலா

2009, மே மாதம் 18ம் தேதி எழுதியது

வானில் ஒளிராமல்
மனம் சோர்ந்து நின்றாலும்
அன்பால் ஒளிர்ந்தே
பூமிக்கு அழகாகும்
தண்ணீர் தாயின்
பிள்ளை நிலா

மின்னல் – II

2009, மே மாதம் 16ம் தேதி எழுதியது

மின்னல் சில நேரம்
உயிரை தாக்கும் என
படித்ததாய் நினைவுண்டு
மின்னல் மறைந்த பின்னும்
உயிரை உடைக்கும் என
படித்து கொண்டேன்
புன்னகைத்த பொய்யிலே